பக்கம் எண் :

செந்தமிழும் கொடுந்தமிழும்47

8

8

செந்தமிழும் கொடுந்தமிழும்

    'செந்தமிழ்', 'கொடுந்தமிழ்' என்னும் தொடர்களிலுள்ள செம்மை கொடுமை என்னும் அடைகள், முறையே நேர்மை,கோணல் என்னும் பொருள்களை உணர்த்தும். இலக்கண நேர்மையுள்ள தமிழ் செந்தமிழ்; அது கோணிய தமிழ் கொடுந்தமிழ்.

    செம்மை, கொடுமை என்னும் பண்புகளை மட்டும் எடுத்துக் கொள்ளின், அவற்றுள் எது முந்தியது எது பிந்தியது எனச் சொல்ல வியலாது. ஏனெனின், இயற்கையில் நேரான பொருள்கள் செயற்கையில் கோணலாக்கப்படுவனவும், இயற்கையில் கோணலான பொருள்கள் செயற்கையில் நேராக்கப்படுவனவும் எத்துணையோ கண்கூடாகக் காண்கின்றோம்.

     ஆயின், செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் இரண்டனுள் எது இயல்பு எது திரிபெனின், செந்தமிழே இயல்பாம், கொடுந்தமிழே  திரிபாம். இது மறுக்கொணாத வுண்மையாயினும், ஆராய்ச்சி யில்லாதார்க்கு மயங்கற் கிடனாம். செந்தமிழ், கொடுந்தமிழ் என்பவற்றின் இயல்களை அல்லது இலக்கணங்களை  அறிவாராயின், எவரும் மயங்கார்.

    செந்தமிழின் திரிபே கொடுந்தமிழ் என்னும் உண்மையை உணர்தற்கு, முதலாவது அவ் விரண்டும் வழங்கும் திசையை நோக்குதல் வேண்டும். தமிழ்நாட்டின் வடபாலுள்ள நாடுகளே பழந்தமிழ் இலக்கண விலக்கியங்களுள், 'மொழிபெயர் தேயம்' என்றும் 'தமிழ்திரி நிலம்' என்றும் சுட்டப்படுகின்றன. இன்றும், நாவலந் தேயத்தின் தென்கோடியிலேயே தமிழ் வழங்கவும், தமிழ்நாட்டின் வடக்கும் வடமேற்கும் கொடுந்தமிழ்த் திரிபான திரவிட மொழிகளே வழங்கவும், தமிழ்நாட்டின்கண்ணும் தெற்கு நோக்கியே தமிழ் திருந்திச் செல்லவும்  காண்கின்றோம்.

    கொடுந்தமிழின் பண்பாடே செந்தமிழாயின், செந்தமிழ் நிலம்  முந்துநிலையில் கொடுந்தமிழ் நிலமாயிருந்திருத்தல் வேண்டும். இதற்கொரு சான்று மில்லாமையோடு, பண்டொருகால் செந்தமிழ் நிலமாயிருந்த பகுதிகள் இன்று கொடுந்தமிழ்  நிலங்களாகத் திரிந்துள்ளமையுங் காண்கின்றோம்.