10
10
மலையாளமும் தமிழும்
இந் நாவலந் தேயத்துப் பழைய
மொழிகளிற் பெரும்பாலன, வடமொழி, தென்மொழி என்னும் இருபெரு மொழிகளுள் அடங்கும். அவற்றுள்,
வடமொழிச் சார்பின வடஇந்தியாவிலும், தென்மொழிச் சார்பின தென்னிந்தியாவிலும் வழங்கிவருகின்றன.
ஆரியம் இந்தியாவிற்குட் புகுமுன்னரே, திரவிடம் இங்கு எண்ணரு நூற்றாண்டுகளாக வழங்கி வந்ததால்,
இந்தியாவின் தொன்முதுமொழி திரவிடம் என்னும் தென்மொழியே. குமரி முதல் பனிமலை (இமயம்)
வரை ஒரு காலத்தில் இந்தியா முழுதும் தென்மொழியே வழங்கிவந்ததென்பதற்கு, பெலுச்சித் தானத்திலும்
வங்காளத்திலும், முறையே, பிராகுவி அரசமகால் என்னும் திரவிட மொழிகள் வழங்கிவருவதும், வடநாட்டு
ஆரியமொழிகளின் அடிப்படை ஒருமருங்கு திரவிடமாயிருப்பதும், "குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத்
துலகாண்ட சேரலாதற்கு" என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதை உரைப் பாட்டுமடை யெடுப்புத்தொடரும்
போதிய சான்றாம்.
இனி, கடைக்கழகக் காலம்வரை வேங்கடத்திற்குத்
தெற்குப்பட்ட நாவல்நிலம் முழுவதும் தமிழ்நாடா யிருந்தமை,
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"
(தொல்.
சி. பா.)
"வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
வரைமருள் புணரியொடு பொருது கிடந்த
நாட்டியல் வழக்க நான்மையிற் கடைக்கண்
யாப்பின திலக்கண மறைகுவன் முறையே."
(சிறுகாக்கைபாடினியம்)
"நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமுந்
தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு."
(சிலப். வேனிற்காதை)
"குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில்"
(சிலப். நூற்கட்டுரை)
என்னும் செய்யுட் பகுதிகளாலும், இற்றை
மலையாள நாடு அற்றைச் சேரநாடா யிருந்தமையாலும் அறியப்படும்.
|