பக்கம் எண் :

38தமிழர் மதம்

New Page 1

இருவகைத் தீவினையும் நீக்கி இறைவனை வழிபடின், இல்லறத் தாலும் துறவறத்தாலும் இருபாலாரும் வீடு பெறலாம். வீட்டுலகம் சிவனுலகம்(சிவவுலகம்) எனப்படும். வீடு பெறும்வரை ஆதன் பிறவிக் கடலுள் அழுந்தும். நிலைத்திணை, நீர்வாழி, ஊரி, பறவை, விலங்கு, மாந்தன், தேவன் எனப் பிறவி எழுவகை.

    இதுவே சிவக் கொண்முடிபு.

    அன்னீறும் ஆனீறும் ஒன்றன்பாலையும் உணர்த்தும்.

     எ-டு : தனியன்(தனிப்பாடல்), தடியன்(பூசணிக்காய்),
            அலவன், மடையான், குண்டடியன், கடுவன்.
 
     "காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்  
      நாமங் கெடக்கெடும் நோய்" (குறள். 360)

என்பதில், மும்மாசு குறிக்கப்பட்டிருத்தல் காண்க.

    காமங் கெடுதல் என்பது, இல்லறத்திற்குப் பிறனில் விழை யாமையும் பிறன்பொருள் வெஃகாமையும்; துறவறத்திற்கு ஆசை அடியோ டொழிதல்.

    தெரியாது மிதிப்பினும் தீச்சுடுதல் போல, தெரியாது செய்யும் தீவினையும் தீங்கு விளைக்கும் என்பது கொள்கை. நல்வினையாற் கேடில்லை.

   "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்  
    நோயின்மை வேண்டு பவர்" (குறள். 320)
   
   "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்  
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" (குறள். 5)

என்பதில், இருவினை யென்றது தெரிந்தும் தெரியாதும் செய்யும் தீவினைகளையே.

    தசரதன் வேட்டையாடியபோது தெரியாது கொன்ற சிறு வனின் குருடரான பெற்றோர் இட்ட வைவே(சாபமே), பின்னர் இராமனைக் காட்டிற் கேகச்செய்தது என்பது, நடுநிலை யறிஞர் கருத்து.

     "அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்  
      போஒய்ப் பெறுவ தெவன்" (குறள். 46)

என்பதனால், இல்லறத்தாலும் வீடுபேறுண் டென்பதே தமிழர் கொள்கையாம்.

     "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை  
      நோற்பாரின் நோன்மை யுடைத்து" (குறள். 42)