பக்கம் எண் :

4தமிழர் மதம்

    அமை - அவை = கூட்டம்.

    அமை - அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை நிகழும் சிறுபோது.

    அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை முடிதல், அணியமாதல்.

    சமையல் = சோறு குழம்பாக்கும் வினை.

    "சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும்."      (பழமொழி)

    சமை - சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத் தக்க வேளை.

    சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரணவொழுக்கம்.

    பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகர மாயிற்றென அறிக.

    வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம் + அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய பின்பும்,

   "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று  
    சூழினுந் தான்முந் துறும்"

(குறள். 380)

    என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ் வடசொல் தென் சொற் றிரிபேயாதல் காண்க.
   
    ஸம் = உடன், கூட. அய = செல்கை, வருகை.
   
    'அய' என்னும் சொற்கு, 'அய்' என்பதை அடியாகவும் 'இ' என்பதை வேராகவும் காட்டுவர். இ - அய் - அயன =  செலவு.

    தமிழில், கூடுதலைக் குறிக்கும் அடிச்சொற்களுள் கும் என்பது ஒன்று. கும்முதல் = கூடுதல், குவிதல்.

    கும் - கும்மல். கும் - கும்பு-கும்பல்.

    கும் - குமி - குமியல். குமி -குவி - குவியல்.

    கும்மல் - L. cumulus=heap; cumulare=to heap up, E. cumulate, accumulate.