பக்கம் எண் :

56தமிழர் மதம்

    விண்ணுலகத் (த்யுலோக) தெய்வங்கள்: சூரியன், விசுவே தேவர், அசுவினியர் முதலியன.

    அக்கினி, இந்திரன் முதலிய சில தெய்வங்கள் மூவகை யுலகிற்கும் உரியன.

வேதக்கால ஆரியத் தெய்வநிலைகள்

    (1) எல்லாத் தெய்வங்களும் சிறுதெய்வ நிலையின.
   
    (2) வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தெய்வம் தலைமையாய் இருந்திருக்கின்றது.
   
    (3) சில தெய்வங்களைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருந் திருக்கின்றன.
   
    (4) ஒரே தெய்வத்தைப்பற்றியே பகுத்தறிவிற் கொவ்வாத முரண் பட்ட கூற்றுகளும் உள்ளன.
எ-டு: இந்திரன் தன் தாய் தந்தையரைப் படைத்தான். தக்கன் (தக்ஷன்) அதிதியைப் படைத்தான்; அதிதியிடம் தக்கன் உண்டானான்.
   
    (5) இயற்கைத் தோற்றங்களெல்லாம் தெய்வங்களாக்கப் பட்டுள்ளன.
   
    (6) வாரணன் என்னும் நெய்தல்நிலத் தமிழ்த் தெய்வம், கிரேக்க ரிடையும் கீழை யாரியரிடையும் வானத்தெய்வமாக மாறி, மீண்டும் தமிழர் தொடர்பால் நீர்த் தெய்வமாகவும் கடல் தெய்வமாகவும் முந்து நிலைக்குத் திரும்பிற்று.
   
    (7) இந்திரன் என்னும் வடநாட்டுத் தெய்வம், பெயர் மாறிய வேந்தன் என்னும் மருதநிலத் தமிழ்த் தெய்வமே.
   
    (8) பிரமன் என்னும் ஆரியப் படைப்புத் தெய்வம், இருக்கு வேதக்காலத்தில் தோன்றவில்லை.
   
    (9) முருகன், சிவன், காளி, திருமால் என்னும் தமிழச் சிறு தெய்வங்களையும் பெருந் தேவரையும் பற்றி, ஆரிய வேதத்தில் ஒரு குறிப்பு மில்லை.
   
    (10) மங்கலம் அல்லது நன்மை என்று பொருள்பட்டு, அக்கினி இந்திரன் உருத்திரன் ஆகிய முச் சிறுதெய்வங்கள் பெயர்க் கும் அடைமொழியாய் வழங்கிய 'சிவ' என்னும் எச்சச் சொல் வேறு; சிவந்தவன் என்று பொருள்படும் சிவன் என் னும் தமிழப் பெருந் தேவன் பெயர் வேறு.