பக்கம் எண் :

58தமிழர் மதம்

பு

புகுந்தாராயினும், அவருட் பூசாரியர் தவிரப் பிறரெல்லாம் இந்தியப் பழங்குடி மக்களொடு கலந்துபோனமையால், வடநாட்டிலும் தென் னாட்டிலும் ஆரியத்தைப் பரப்பியவரும், ஆரியரென்று பொதுவாகச் சொல்லப்படுபவரும், பிராமணரே என்றறிதல் வேண்டும்.

    ஆரியர் தம் முன்னோர் மொழியை மறந்து போனதற்கும், அவரது வேதமொழி வடநாட்டுப் பிராகிருதத்தொடு கலந்து எகர ஒகரக் குறிலில்லாமலிருத்தற்கும், அவர் சிறுபான்மையராயிருந்து பழங்குடி மக்களொடு கலந்து போனதே கரணியமாகும்.

    ஆரியர்க்கும் பழங்குடி மக்கட்கும் இடையே நடந்தனவாக வேதத்திற் சொல்லப்படும் போர்களெல்லாம், பிராமணியத்தை ஏற்றுக்கொண்டவர்க்கும் ஏற்காதவர்க்கும் இடைப்பட்டனவேயாம்.

    விரல்விட்டு எண்ணத்தக்க பிராமணர் தென்னாடு வந்து, தாம் நிலத் தேவ ரென்றும் தம் மொழி தேவமொழி யென்றும் சொல்லி, மூவேந்தரையும் அடிப்படுத்தியதையும்; இன்றும் ஆரியச் சார்பான பேராயத் தமிழர் உரிமைத் தமிழரை வன்மையாக எதிர்ப்ப தையும் நோக்கின், தமிழ் திரிந்தும் தமிழாட்சியின்றியும் போன வட நாட்டில், ஆரியப் பூசாரியர் சில அரசரைத் துணைக் கொண்டு நாட்டு மக்களை வென்றது, ஒரு சிறிதும் வியப்பன்று.

    ஆரியர், முன்பு பிராகிருதரையும் பின்பு திரவிடரையும் அதன் பின் தமிழரையும் வெல்லக் கையாண்ட வழிகளுள் ஒன்று, அவர் தெய்வத்தைத் தாமும் வணங்கல். இது அடுத்துக் கெடுத்தல் என்னும் வலக்காரத்தின் பாற்பட்டது.

    முதலிற் சிந்துவெளியிலும், பின்னர்ச் சரசுவதி யாற்றிற்கும் திருடத்துவதி யாற்றிற்கும் இடைப்பட்ட பிரமவர்த்தத்திலும், அதன் பின் விசனசத்திற்குக் கிழக்கும் பிரயாகைக்கு மேற்குமாகப் பனி மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட மத்திய தேசத்திலும், இறுதியில் ஆரியாவர்த்தம் என்னும் வடஇந்தியா முழுதும் பரவிய ஆரியர், வங்கத்திலுள்ள காளிக்கோட்டத்தை யடைந்தபின், காளி வணக்கத்தை மேற்கொண்டனர். பிராமணனே காளிக்குக் கடா வெட்டும் பூசாரியுமானான். காளி - வ. காலீ. ஆரியர் சிந்துவெளியி லிருந்தபோதே, வேந்தன் வணக்கமாகிய இந்திர வணக்கத்தை மேற்கொண்டது முன்னர்ச் சொல்லப்பட்டது. வேதக் காலத்தின் இறுதியில், இந்திரன் தலைமை ஆரியத் தெய்வமானது கவனிக்கத் தக்கது.