பக்கம் எண் :

6தமிழர் மதம்

    ஊ - ஊன் = நீ (முன்னிலை யொருமைப் பெயர்).
    ஊ - உ - உந்து. உந்துதல் = முன் தள்ளுதல்.
    உ - உய். உய்தல் = முன்செல்லுதல், செல்லுதல்.
    உய்த்தல் = முன்செலுத்துதல், செலுத்துதல்.
    உய் - இய் - இயவு = 1. செலவு.
 
 
     "இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில்"

(சிலப். 11:168)

  2. வழி.

    இயவு - இயவுள் = எல்லாவுயிர்களையும் வழிநடத்தும் இறைவன்.
    இய் - இயல் = செலவு.
   
    "புள்ளியற் கலிமா"

(தொல். பொருள். 194).

   
    இயலுதல் = செல்லுதல், நடத்தல். 
   
    "அரிவையொடு மென்மெல வியலி"

(ஐங். 175).

    இய - இயங்கு -இயக்கு - இயக்கம். இயங்குதல் = செல்லுதல், நடத்தல், அசைதல்.

    இய் - . அய். இனி, உய் என்பதும் அய் என்று திரிந்திருக்கலாம்.

    தமிழ் ஆரியத்திற்கு முந்தியது என்னும் வரலாற்றுண்மையை யும், மேற்காட்டிய சொல் வரலாறுகளையும், நடுநிலையாக நோக்கு வார்க்கு, மதம் சமயம் என்னும் இருசொல்லும் தென்சொல்லே யென்பது, தெற்றெனத் தெரியாமற் போகாது.

3. மதம் தோன்றிய வகை

(1) அச்சம்

    காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருளையும் வேட்டையாடிய விலங்கு பறவை யிறைச்சியையும் உண்டு வாழ்ந்து, அநாகரிக நிலையிலிருந்த முந்தியல் மாந்தர்; தீயும் இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோ ராவிகட்கும் அவற்றுள் ஒரு சாரனவான பேய்கட்கும், அஞ்சிய அச்சமே; தெய்வ வணக்கத்தை அல்லது சிறுதெய்வ மதத்தை முதற்கண் தோற்றுவித்தது. அதனால், கொல்லுந் தன்மையுள்ள எல்லாவற்றையும் தெய்வமாகக் கொண்டு, அவை தம்மைக் கொல் லாவாறு இயற்கையும் செயற்கையுமாகிய உணவுப் பொருள்களைப் படைத்தும், இருதிணை யுயிரிகளையும் காவு கொடுத்தும், வந்தனர்.