பக்கம் எண் :

14

    சேலம் மாவட்டத்துச் சேர்வராயன்மலை, பச்சைமலை, கொல்லிமலை முதலிய மலைகளில் வாழும் தமிழ் மலையாளிக் குலத்தில், (1) பெரிய மலையாளி, (2) பச்சை மலையாளி, (3) கொல்லி மலையாளி என்னும் மூன்றும் உட்குலங்கள். இவற்றுள், கொல்லி மலையாளி என்னும் உட்குலத்தில் (1) முந்நாட்டு மலையாளி, (2) நால்நாட்டு மலையாளி, (3) அஞ்சூர் மலையாளி என்னும் நாட்டுத் தொகுதியில், (1) மயிலம், (2) திருப்புலி, (3) இடப்புலி, (4) பிறகரை, (5) சிற்றூர் என்னும் ஐந்தும் நாடுகள் என்னும் உட்பிரிவுகள். இவற்றுள், சிற்றூர் என்னும் நாட்டில், (1) பீலன், (2) மூக்காண்டி, (3) பூசன், (4) மாணிக்கன், (5) திருவிச்சி, (6) கண்ணன், (7) தில்லான் என்னும் ஏழும் வகுப்புகள் என்னும் உட்பிரிவுகள். இவற்றுள் முன் ஐந்தும் ஒரு தொகுதித் தாயாதி வகுப்புகள்; பின் இரண்டும் மற்றொரு தொகுதித் தாயாதி வகுப்புகள். இவ் இரு தொகுதிகளுள் ஒவ்வொன்றும் அடுத்த தொகுதியுளன்றித் தன் தொகுதியுள் மணப்பதில்லை. இது புறமணமாம்.

    கொங்குவேளாளர் குலத்தின் உட்பிரிவுகளான, தூரங்குலம் செம் போத்தங்குலம், ஆந்தைக்குலம் முதலிய இருபத்திரண்டு குலங்களும், புறமணத்தனவாம். இக் குலங்கள் கூட்டமெனவும்படும்.

    ஒரே குலத்துள் தொடர்ந்து மணங்கள் நடைபெறுவதால் விளை யும் கேட்டை விலக்குதற்கே, குலப்பிரிவுகட்குப் புறமணம் விதிக்கப் பட்டதாகத் தெரிகின்றது.

    அரசர் பிறகுலத்தில் தாம் பெண்கொண்டாலும், தம் மகளிரைப் பிறகுலத்தார்க்குக் கொடுப்பதில்லை. இது உயர்மணத்தின் (Hypergamy) பாற்படும்.    

3. மணமக்கள் தொகை பற்றியது

    மணமக்கள் தொகைபற்றி, தமிழ் மணங்கள் (1) ஒரு மனையம் (Monogamy), (2) பல்மனையம் (Polygamy), (3) பல்கணவம் (Polyandry) என மூவகைப்படும்.

    ஒரு காலத்தில் ஒரே மனைவியுடைமை ஒருமனையம்; ஒரே காலத்தில் பல மனைவியருடைமை பல்மனையம்; ஒரே காலத்தில் பல கணவருடைமை பல்கணவம்.

    பண்டைக் காலத்தில், பல அரசரும் தலைவரும், பல்மனையத் தைத் தழுவியதுடன் பொதுமகளிராகிய பரத்தையருடனும் தொடர்பு கொண்டிருந்தனர். பரத்தையருள், வேறாக ஓர் இல்லத்தில் இருப்பவள் இற்பரத்தை யென்றும், பரத்தையர் சேரியில் இருப்பவள் சேரிப்பரத்தை யென்றும், சேரிப்பரத்தையருள் சிறந்து காதலிக்கப்படுபவள் காதற் பரத்தையென்றும் சொல்லப்படுவர்.

    பரத்தையர் போன்றே பொதுமகளிராயுள்ள இன்னொரு வகுப்பார் கணிகையர் (கூத்தியர்) என்பார். காலங்கணித்தாடுபவர் கணிகையர். அவர் நாடகக் கணிகையர் கோயிற் கணிகையர் என இருசாரார்.