ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும் சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே" | இது, உடன்போக்கில் தலைவியைத் தேடிச் சென்ற செவிலித் தாயை நோக்கி அறிஞர் கூறியது. (1. உறு-பொருந்தும், சாந்தம்-சந்தனம், படுப்பவர்-பூசுபவர், அனையளே-அப்படிப்பட்டவளே. 2. கெழு-பொருந்திய, முத்தம்-பெரிய முத்து, தேருங்கால்-ஆராயுமிடத்து. 3. புணர்-பொருந்திய, இன்னிசை-இனிய ஒலி, முரல்பவர்-வாசிப்பவர், யாழ்-வீணை, சூழுங்கால்-ஆராயுமிடத்து). மணமகன், மணமகளைத் தனக்குச் சமமான வாழ்க்கைக் துணையாகக் கருதல்வேண்டும்; கரணவேளை தவிர மற்ற நேரத்தில் ஆசிரியனும் பெரியோரும்போன்ற குரவரைக்கண்டால், உடனே எழுந்து வணக்கஞ் செய்தல் வேண்டும்; தான் அரச நிலையில் இருப்பதாகக் கருதிக்கொண்டு, நவாபு ஓலக்கம் (தர்பார்) நடாத்துதல் கூடாது. மணப் பந்தியில் தானும் சேர்ந்து பரிமாறலாம், மணமகளொடு கலந்து பேசலாம். மணமகள் கரணவேளையிலும் மணமேடையிலும் பிடரிவலிக்கத் தலை கவிழ்ந்தேயிருத்தல் வேண்டுமென்பதில்லை. மற்ற வேளையிலும், பேசா மடந்தையாயிருத்தல் கூடாது. மற்றப் பெண்டிருடன் கலந்துரையாடலாம்; அவர்க்கு வேண்டுவன கொடுத்துதவலாம்; மண மகனுடன் பேசலாம். மணமக்கள், மணவிழாவின்பின் கணவனும் மனைவியுமாய்ச் செய்ய வேண்டிய கருமங்களும் கடமைகளும், என் 'மணவாழ்க்கை' என்னும் நூலில் விரிவாய்க் கூறப்பெறும். உறவினரும் நண்பரும், மணமக்கள் ஏழையராயும் திருப்பிச் செய்ய இயலாதவராயும் இருந்தால்தான் அவர்க்குப் பரிசும் நன் கொடையும் வழங்கல் வேண்டும்; செல்வராயிருப்பின் தேவையில்லை; பெருஞ் செல்வராயிருப்பின் வழங்கவே கூடாது. அவர்க்கு வழங்குவது பொருளியல் நூலுக்கு மாறான பெருங் குற்றம். உறவினர் மொய் வைக்கும்போது, மணவீட்டார் தமக்கு முன்பு செய்த அளவே செய்யவேண்டும் என்று கருதவேண்டுவதில்லை. தம் செல்வ நிலைக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ செய்யலாம்; அல்லாக்கால் அது வட்டியில்லாக் கடன்போலிருந்து தன் சிறப்பை யிழக்கும். மண வீட்டாரும் உறவினர் நிலையறிந்து பெருந்தன்மையாய் இருந்துகொள்ள வேண்டும். |