பக்கம் எண் :

56


    முதற்காலத்தில், மக்கள் குடும்பப்பிரிவின்றிக் குலங்குலமாய் அல்லது தொகுதிதொகுதியாய் வாழ்ந்துவந்த நிலையில், ஒரு குலத்துப் பெண்டிர்,பெரும்பாலும் குலத்தலைவன் மனைவியர் நீங்கலாக, அக் குலத்து ஆடவர் அனைவர்க்கும் பொது மனைவியராகவே இருந்து வந்தனர். பின்பு நாகரிகந் தோன்றித் தனிமனைவியர் ஏற்பட்டபின், ஒருவன் தன் மனைவியை அல்லது மனைவியரை வேறாகப் பிரித்து வைத்தற்கு, தாலிகட்டும் வழக்கம் ஏற்பட்டது. 'ஈகை யரிய இழையணி மகளிர்' (புறம். 127),என்பது தமிழப்பெண்டிர் தாலியணியும் வழக்கத்தைக் குறிக்கும் சங்கநூற் சான்றாம்.

    முந்துகாலத்தில், சிறப்பாகக் குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்து வந்தபோது, இலையையும் பூவையும் ஆடையணியாக அணிவது தமிழர் வழக்கம். நால்வகை யிலையுள்ளும் ஓலையென்பது தியானதாதலின், பனங்குருத்தால் காதணி கழுத்தணி முதலிய பல்வேறு அணிகளை அவர் செய்துகொண்டனர். சேரன் பனம்பூ மாலையை அடையாள மாலையாகக் கொண்டிருந்ததினாலும், ஓலையைக் குறிக்கும் தோடு என்னும் சொல் இன்றும் காதணிப்பெயராய் வழங்குதலாலும், காதில் ஓலையணிவதால் ஓலைப்பள்ளி யென்று பெயர் பெற்ற ஒரு பள்ளி வகுப்பார் இன்றிருத்தலாலும், தாழ்த்தப்பட்ட சில குலத்துப் பெண்டிர் ஓலையையே காதில் அணிவதாலும், பழங்காலத்தில் ஓலையணிகளைக் காதிலும் கழுத்திலும் தமிழப் பெண்டிர் அணிந்தனர் என்பதில், எள்ள ளவும் வியப்பிற்கிடமின்றாம். காதிற்போன்றே கழுத்திலும் பனங்குருத் தணி அணியப்பட்டமை.

"தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு"

என்னும் நாலாயிரத் தெய்வப் பனுவலடியால் (திவ். பெரியாழ். 2, 6, 1) தெரியவரும்.

    தாலத்தின் ஓலையினாற் செய்யப்பட்டதினாலோ, தால்போல் தொங்குவதினாலோ, பெண்டிரின் திருமணக் கழுத்தணி தாலியெனப் பெயர் பெற்றிருக்கலாம். தாலம் பனை. தால்-நாவு. இனி, நாலி (தொங்கு வது) என்பது தாலி எனத் திரிந்தது எனலுமாம்.

    மக்கள் நாகரிகமடைந்து பொன்னால் அணி செய்யத் தொடங்கிய பின், தாலியும் பொன்னாற் செய்யப்பெற்றது.

"பொற்றாலி யோடெவையும் போம்"

என்றார் ஒளவையார்.

    சிலர் பொற்றாலியில் மணியும் பதித்துக்கொண்டனர்.

"நாணுள் ளிட்டுச் சுடர்வீசு நன்மாணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்தணிந்து"

என்பது சிந்தாமணி (2697).

"பன்மணிப் பூணுஞ் சின்மணித் தாலியும்"

என்பது பெருங்கதை (19:119)