|                       | தமிழன் எப்படிக் கெட்டான்? |      "வெள்ளைக்காரன் உடுத்திக் கெட்டான், துலுக்கன் தின்று கெட்டான்,         தமிழன் வைத்துக் கெட்டான்" என்பது பழமொழி. இதில், 'வைத்து' என்பது புதைத்தும்         புதையாதும் பயன்படுத்தாது வைத்தலைக் குறிக்கும். தமிழன் செல்வம் அல்லது பணம் ஆகிய         ஒருவகை உடைமையையே வைத்துக் கெட்டதாகப் பொதுவாகக் கொள்ளப்பட்டாலும், உண்மையில்         கல்வி செல்வம் என்னும் இருவகையுடைமையையுமே வைத்துக் கெட்டவனாயிருக்கிறான்.     ஒரு தனிமகன் அல்லது ஒருநாடு முன்னேறுவதற்குக் கல்வி செல்வம்         இரண்டும் வேண்டும். இவற்றுள் ஒன்றிருந்தால் மட்டும் போதாது. தமிழன் இவ்விரண்டு         மிருந்தும் கெட்டமை மிகமிக இரங்கத்தக்கது.     ஒருவன் கெடுவது மூவகை; ஒன்று அறிவோ பொருளோ அவை யிரண்டுமோ         இல்லாமை; ஒன்று அவையிருந்தும் பயன்படுத்தாமை; ஒன்று அவற்றைத் தவறாய் ஆளுதல். இவற்றுள்,         தமிழன் கெட்டவகை பின்னிரண்டு மாகும். ஒருவன் ஒன்றை அடைதற்கோ அதைப் பயன் படுத்துதற்கோ         உலகில் உடம்போடிருத்தற்கோ அறிவு இன்றியமையாத தாதலின், அதைச்சரியாய் ஆளுதல் ஆக்கத்திற்கும்         தவறாய் ஆளுதல் கேட்டிற்கும் காரணமாகும். ஆகவே, அறிவைப் பயன்படுத்தற்கும் பகுத்தறிவு         வேண்டும் என்பது பெறப்படும். பகுத்தறிவில்லா அறிவு கடிவாளமில்லாத குதிரையும்         சுக்கானில்லாத கப்பலும் போலாம்.     தமிழன் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே, உலகத்தில் பலதுறை         களிலும் தலை சிறந்தவனாயிருந்திருந்தும், பிற்காலத்தில் தன் பகுத் தறிவைப் பயன்படுத்தாது         வைத்துக் கெட்டமை, இச்சுவடியில் விரிவாய்க் கூறப்படும். |