பக்கம் எண் :

12தமிழர் வரலாறு-1

ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்துள்ள தீவுகளிலும் வழங்குதலும்.

6. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழான பின் ஏற்பட்ட தலைக்கழகம் குமரிக்கண்டத் தென்கோடிப்
  பஃறுளி யாற்றங் கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத்
  தொன்மையும், அக் கண்டம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமையும்.

7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக்
  கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுவதும், குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும்,
  தென் என்னும் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

8. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள
  காரோதிமமும் (காரன்னமும்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் தீவில் இன்றுமிருத்தல்.

9. வாணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) வகைகளுந்தவிர,
  மற்றெல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகை களுமாகிய முதற் பொருளும், இன்றும்
  தென்னாட்டிற்கு இயற்கையாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.

10. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்),தென்மொழி, தென்னவன் ( பாண்டியன்), தென்கலை என்னும்
  பெயர் கள் தொன்றுதொட்டு வழங்கிவந்துள்ளமை.

11. தென்வடல், தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், 
  தென்பல்லிவடபல்லி (தலையணிகள்) முதலிய வழக்குகளில் தென்திசை முற்குறிக்கப் பெறுதல்.

12. கடைக்கழகக் காலத்தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென் புலத்தார் எனக் குறித்தமையும்,
   கூற்றுவன் தென்றி சைக்கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் எனப் பெயர்
   பெற்றிருத்தலும்.

13. தென்மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையெல்லாம் தமிழே காட்டிநிற்றல்.