பக்கம் எண் :

128தமிழ் வரலாறு

முந்துநிலை யெழுத்துகள்

தமிழ் உலகப் பெருமொழிகட்குள் மிக முந்தித் தோன்றிய இயன்மொழியாதலால், அதிற் பிற மொழிகளிற்போல் எல்லா எழுத் துகளும் சொன் முதலிடைகடையாகிய மூவிடத்தும் வருவதில்லை.

முதனிலை யெழுத்துகள்

சொன்முதலில் உயிரும் உயிர்மெய்யுந்தான் வரும்; ஆய்தமும் மெய்யும் வரவே வரா.

ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் ஒன்பதுமெய்யும் உயிரோடுகூடி உயிர்மெய்யாகவும் சொன்முதல் வரா. உயிரோடு கூடிச் சொன்முதல் வரும் மெய்களுள்ளும், கசதநபம என்னும் ஆறே பன்னீருயிரொடுங் கூடிவரும். ஏனையவற்றுள், ஞகரம் நாலுயிரொடும், யகரம் ஈருயிரொடும், வகரம் எட்டுயிரொடும் கூடிவரும். அவையாவன:

ஞ, ஞா, ஞெ, ஞொ; ய (யவனர்), யா; வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ.

இடைநிலை யெழுத்துகள்

சொல்லிடையில் ஆய்தமும் மெய்யும் உயிர்மெய்யுமே வரும்; தனியுயிர் வராது. உயிருள், குறில்மட்டும் அளபெடைக் குறியாக வரும்.

க், ச், த், ப் ஆகிய நால் வல்லின மெய்கட்குப்பின், தன்னுயிர் மெய்யேயன்றி வேற்றுயிர்மெய் வராது. இது உடனிலை மெய்ம் மயக்கம் எனப்படும். பிற மெய்கட்குப்பின் பிற வுயிர்மெய்கள் சிலவும் பலவும் வரும். இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப் படும். மயக்கம்-கூட்டம்.

ர், ழ் ஆகிய இருமெய்யும் இரட்டா; ஏனைய இரட்டும்.

ய், ர், ழ் ஆகிய மும்மெய்க்குப்பின் தனிமெய் வரலாம்; பிறவற்றின் பின் வரா.

எ-டு: வாய்ப்பு, தேர்ச்சி, சீழ்க்கை.

ம்ர, ம்ல; வ்ர, வ்ல என்னும் கூட்டுகள் தமிழில் எவ்வகையிலும் நிகழா.

ண்ஞ், ன்ஞ; ஞ்ய, ண்ய, ந்ய, ம்ய, வ்ய, ன்ய; ம்வ என்னுங் கூட்டுகள் கூட்டுச்சொல் லிடையிலன்றி வரா.