சேரன்
சேரநாடு மலையாற் சிறந்தது. அதனால்
பொறையன், மலையன், மலையமான், மலைநாடன் என்பன
சேரன் பெயர் களாகும். தமிழ் நாட்டிலுள்ள சிறந்த
மலைத் தொடர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையும்
கிழக்குத் தொடர்ச்சி மலையுமே. இவற்றைக்
கொண்டது சேரநாடு. அந் நாட்டு நிலமுழுதும் மலையின்
இருபக்கமு முள்ள சாரலே. சாரலாவது மலைச்சரிவு
நிலம். அதனால் சாரல் நாடன் என்பது மலைநாடன்
என்னும் பொருளில் வழங்கும்.
"வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை யாகுமதி" (குறுந். 18:1-2)
என்னும் குறுந்தொகைச் செய்யுட்
பகுதியில் இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன்
"சாரல் நாட" எனத் தோழியால் விளிக்கப்
பட்டிருத்தல் காண்க.
சாரல் என்பது அன்னீறு பெற்றுச்
சாரலன் என்றாகும். அது பின்னர்ச் சேரலன் எனத்
திரிந்து குடமலைநாட்டு வேந்தனைக் குறித்தது.
சேரலன் என்பது ஈற்றயல் தொக்குச் சேரன்
என்றாயது. சேரன் என்பதும், செய்வன் என்பது
செய்வல் என்று திரிந்தாற்போல் ஈறு திரிந்து
சேரல் என்றாயிற்று. மான் என்னும் ஈறு சேரின்,
சேரன் என்பது சேரமான் என்றாம். மான் என்பது
மகன் என்பதன் மரூஉ.
தமிழ்மக்கள் குமரிக்கண்ட அளவிலேயே
வாழ்ந்தபோது பாண்டியன் ஒருவனே ஆண்டானென்றும்
பின்பு மக்கள் பெருகி வடக்கிற் பரவியபின் ஒரு
பாண்டியனின் இளவலார் இருவர் சோழனும் சேரனுமாகி
வடநாவலை ஆண்டா ரென்றும், ஒரு செவிமரபுச் செய்தி
வழங்கி வந்திருக்கின்றது. மூவேந்தருள் முந்திய
பாண்டியனை ஆரியனாக்கிவிடின், ஏனையிருவரும் தாமாக
ஆரியராய்விடுவர் என்பது தமிழ்ப் பகைவர் கருத்து.
அவ் வேமாற்று ஆராய்ச்சியும் உரிமை யுணர்ச்சியும்
மிக்க இக்காலத்துச் செல்லா தாகும்.
"வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு,
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" (சிலப். 11:21-2)
என்பது மூவேந்தருள்ளும் பாண்டியன்
முந்தியவன் என்பதற்குச் சான்றாம்.
12. பழந்தமிழக இடப்பெயர்கள்
குமரி
குமரி என்பது தமிழன் பிறந்தகமான
பழம் பாண்டியின் தென்கோடியடுத்த ஒரு மாபெரு
மலைத்தொடரின் பெயரும், அக் கண்டத்தின்
வடகோடியடுத்த ஒரு பேராற்றின் பெயருமாயிருந்தது.
|