பக்கம் எண் :

38தமிழ் வரலாறு

(3) ‘செயல்’ வாய்பாட்டு ஈயல் என்னும் துணைவினைத் தொழிற்பெயர். ஈயல்-ஈயர்-இயர்-இய-இ.

"நிலீஇயர் அத்தை நீயே யொன்றே" (புறம்.375)

"நடுக்கின்றி நிலீயரோ அத்தை யடுக்கத்து" (புறம்.2)

"உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண்" (புறம்.365)

"எங்கோ வாழிய குடுமி தங்கோ" (புறம்.9)

"தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" (சிலப்.11:22)

(4)அகரவீற்று வினையெச்சம்+உம்

எ-டு: இக் கடிதம் கண்டவுடன் புறப்பட்டு வரவும். - (திருமுக வழக்கு)

இன்னும் ஒரு கிழமைக்குள் சரக்குகளை அனுப்பி வைக்கவும். (வணிக வழக்கு)

இவ் வழக்கு இலக்கிய நடைக்கு ஏற்காது.

வியங்கோள்வினை ஏவல், வாழ்த்து, சாவிப்பு, வஞ்சினம் என்னும் நாற்பொருள்பற்றி வரும். ஏவல் என்றது வேண்டுகோள் அல்லது மதிப் பேவல்.

"பிறனா யினன்கொல் இறீஇயர்என் னுயிரென" (புறம். 210)

என்பது சாவிப்பு.

"அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக" (புறம். 71)

என்பது வஞ்சினம்.

வியங்கோள்வினை மூவிட ஐம்பாலீரெண்ணிற்கும் பொது வாம்; ஆயின், ஏவலும் வாழ்த்தும்பற்றித் தன்மையிடத்தில் வராது.

பிறவினை யீறுகள்

தன்வினை பிறவினையாகும் வகைகள்

(1) முதனிலை வலித்தல்

எ-டு: நீங்கு-நீக்கு, பொருந்து-பொருத்து

(2) இடைநிலை வலித்தல்

எ-டு: தேய்ந்தது-தேய்த்தது, தீர்ந்தான்-தீர்த்தான்.

(3) முதனிலை வலியிரட்டல்

எ-டு: போகு-போக்கு, தேறு-தேற்று.