|
இங்ஙனமே
செய்து கொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சமும்
என்க.
ஆங்கில நிகழ்கால வினையெச்சத்தின்
ஈறாகிய ing
என்பதன் தொல்வடிவாகச் சொல்லப்பெறும் inde
என்பதும், செய்திண்டு என்னும் கொச்சைவடிவீற்றை
ஒத்திருப்பது பெரிதும் கவனிக்கத் தக்கதாம் .
செய்ய என்னும் வாய்பாட்டெச்சம்
நிகழ்காலச் சொல்லன் மயாலேயே, அகரவீற்று
வினையெச்சம் என இந் நூலில் இதுகாறும்
குறிக்கப்பட்டது. இனி எதிர்கால வினையெச்சம்
என்றே தெளிவாய்க் குறிக்கப்பெறும்.
எதிர்கால வினையெச்ச ஈறு:
அ. எ-டு: செய்ய, கொடுக்க, இறப்ப.
செய்ய என்பது செய்யல் என்னும்
அல்லீற்றுத் தொழிற் பெயரின் ஈறு கேடாம்.
செய்யல் (செயல்) வேண்டும் =
செய்யவேண்டும்.
கொடுக்கல் வேண்டும் =
கொடுக்கவேண்டும்.
"ஒல்வழி ஒற்றிடை மிகுதல்
வேண்டும்" (114)
"ஈறா ககரமுனைக் கெடுதல்
வேண்டும்" (115)
"வேற்றுமை மருங்கிற் போற்றல்
வேண்டும்." (156)
"மெய்ந்நிலைப் பொதுச்சொல்
கிளத்தல் வேண்டும்" (725)
என்னும் தொல்காப்பிய
அடிகளிலெல்லாம் அல் அல்லது தல்லீற்றுத்
தொழிற்பெயர் செய்ய என்னும் நிகழ்கால வினை
யெச்சப் பொருள்படுதல் காண்க.
தொழிற்பெயரீறுகள் பற்பல வேனும், அல்லீற்றுத்
தொழிற்பெயரே ஈறுகெட்டு அகரவீற்றைக்
கொண்டிருக்கும். ஆதலால், அதனின்றே எ.கா.வி.எ.ஈறு
பிறந்ததாகும். செய்தல் என்பது தல்லீற்றது;
அல்லீற்றதன்று.
இறக்க, சிறக்க, விழிக்க, கழிக்க
முதலியவற்றை உயர்நடை யாளர் இன்னோசை கருதி
இறப்ப, சிறப்ப, விழிப்ப, கழிப்ப எனத்
திரிப்பர்.
செய்ய என்பது நோக்கங்குறித்த
சொல்லாதலின், செய்யுமாறு, செய்யும்படி,
செய்தற்கு, செய்தற்காக, செய்தற்கென்று, செய்ய
வேண்டுமென்று, செய்தற்பொருட்டு, செய்யவேண்டி.
செய்வான் வேண்டி, செய்யும்நோக்கத்துடன் என்று
இத் தொடக்கத்துச் சொற்றொடர்களும் எதிர்கால
வினையெச்சப் பொருளில் வரும்.
|