பக்கம் எண் :

101

20
தனித்தமிழ் இதழாசிரியர் தவறு

     'தனித்தமிழிதழ்'கள் தமிழ்நாட்டில் மேன்மேலுந் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அவை தனித்தமிழுணர்ச்சி பரவிவருவதை அறி விக்கும் வகையில் வரவேற்கத்தக்கன வேனும், அவற்றுட் பெரும் பாலான மொழிச்சார்பை முதன்மையாகக் கொள்ளாது, கட்சிச்சார்பும் மதச்சார்பும் தனிப்பெயர் விளம்பரமுமே குறிக்கோளாகக் கொண்டி ருப்பது மிக வருந்தத்தக்கதாம்.

     மேலும் சில இதழ்கள் பெயரளவிலேயே தனித்தமிழாயுள்ளன. சிலவற்றில் இலக்கணப் பிழைகளும் மலிந்து கிடக்கின்றன.

     இனி, சில இதழ்கள் சொல்லாராய்ச்சியில் இறங்கிவிடுகின்றன. தமிழ்ப் புலமை பெற்றுப் பன்மொழி பயின்று, பல்லாண்டு மொழியா ராய்ச்சி செய்தவரே, தமிழ்ச் சொல்லாராய்ச்சி செய்தல் கூடும். சிலர் ஆராய்ச்சியுரிமை பேச்சுரிமை போன்று அனைவர்க்கும் பொதுவெனக் கருதுகின்றனர். அங்ஙனங் கருதுவதற்கு, அரசியல் தண்டனையோ தலைமைப்புலவர் அதிகாரமோ இன்மையே கரணியமாகும்.


 

"குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனில்லை
குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை
விளையாட்டாய்ச் (சொல்லாய்வு விரைந்து செய்து)
தெட்டுதற்கோ அறிவில்லா (இளைஞருண்டு
தென்னிதழா சிரியரெனத்) திரிய லாமே"

     இதுவரை தனித்தமிழ் இதழ்களில் வெளிவந்த வழுஉச் சொல் லாராய்ச்சிகளுள், தென் சொல்லாராய்ச்சி யொன்றும் வடசொல்லாராய்ச்சி யொன்றும், இங்கு எடுத்துக்காட்டுகின்றேன்.

1. தென் சொல்லாராய்ச்சி :

     மாற்றுப் பெண் - மாட்டுப் பெண், நாற்றுப் பெண் - நாட்டுப் பெண் என்பன தவறு.