ஒற்றுமை ஒரு குடும்பத்திற்கு வேண்டுவதுபோன்றே, ஒரு நாட் டிற்கும் உலகத்திற்கும் வேண்டும். ஒற்றுமையில்லாக்கால், உயர்திணை யென்று உயர்த்திக் கூறப்படும் மாந்தருக்கும் மற்ற உயிரினங்கட்கும் வேறுபாடில்லை அவ் வொற்றுமை யுண்டாக்குவதற்கு ஒரு பொது மொழி இன்றியமையாதது. அது ஆங்கிலமே. ஓர் உலகப் பொதுமொழிக்கு இருக்கவேண்டிய இயல்புகளெல்லாம் ஆங்கிலத்திற்கு ஒருங்கே அமைந் துள்ளன. அம்மொழி தன்னேர்ச்சியாக இந்திய ஆட்சி மொழியாகவும் உயர்தரக் கல்வி மொழியாகவும் ஏற்கனவே அமைந்துள்ளமை, தமிழர் பெரும்பேறே. அதை ஆராய்ந்துபாராது விரைந்து அதை அகற்றப்பார்ப் பது, தலையால் வந்த பெருநிதியைக் காலால் தள்ளுவது போன்றதே. ஆங்கிலத்தின் அரிய இயல்புகளைப் பலர் அறியாதிருப்பதால், அவர்க்கு அவற்றை அறிவிப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். |
பன்னாட்டுக் கழகமோ, ஐக்கிய நாட்டமைப்போ, உலக நாடுகளோ ஒன்று கூடிப் பேசி முடிவு செய்யாமலே, ஆங்கிலம் தானாக, இயற்கை யாக, எதிர்ப்பின்றி மெல்லமெல்லத் தன் தகுதியினால் உலக மொழியாகி விட்டது. உலகில் மூன்றி லொரு பங்கு ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளது. ஐக்கிய நாட்டமைப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மும் மொழிகளுள் ஆங்கிலம் ஒன்று. உலகிற் பெருவாரியான நூல்களும் செய்தித் தாட்களும் வெளிவருவது ஆங்கிலத்திலேயே. பல நாடுகள் ஆங்கில மொழியைக் கட்டாயப் பாடமாக ஆக்கியுள்ளன. ஏனை நாடுகளிலும் அது விருப்பப் பாடமாக இருந்துவருகின்றது. ஒருவர் உலக முழுதும் சுற்றிவரத் துணைசெய்வது ஆங்கில மொழி ஒன்றே. ஒன்றிய (ஐக்கிய) நாட்டமைப்பு நடவடிக்கைகள் மும்மொழியில் நடைபெற்றாலும், ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் அறிவியல் இலக்கியம் எழுதப்பட்டிருப்பினும், உலக மொழியாக ஒன்றுதான் இருக்க முடியும். அது ஆங்கிலமே; இனிமேல் அதை வேறொரு மொழி மேற் கொள்ளவும் முடியாது. |