பக்கம் எண் :

மதிப்புரை மாலை125

     விளி, நீக்கம் என அறுவேற்றுமையுமே இருப்பதாக; அவ்வம்மொழி இலக்கண நூல்கள் கூறுகின்றன. இங்ஙனமிருப்பவும், அம்மொழிகட்கின மான வேத மொழியும் சமற்கிருதமுமாகிய கீழையாரியத்தில் மட்டும் தமிழ்த் தொடர்பின்றி எட்டு வேற்றுமைகள் எங்ஙனந் தோன்றியிருக்க முடியும்?

     இனி, தமிழில் எத்தனை உருபோ அத்தனை வேற்றுமை என்றும், தமிழிலக்கணியர் வேற்றுமையமைப்பில் சமற்கிருதத்தைப் பின்பற்றிய தால் பல வேற்றுமைகளை ஒரு வேற்றுமைக்குட் செறித்துள்ளனர் என்றும், கால்டுவெலார் கூறியிருப்பது, இடப் பொருளுருபுகளின் பன்மை பற்றியோ பல்வேறு வேற்றுமை குறித்து வரும் சொல்லுருபு பற்றியோ, அறிகிலம். 3ஆம் வேற்றுமையினின்று உடனிகழ்ச்சியைப் பிரித்துவிடினும், வேற்றுமை மொத்தம் ஒன்பதேயாகும். வேற்றுமையென்பது பொருள்பற்றியதே யன்றி உருபுபற்றியதன்று. தமிழ் தானே தோன்றிய இயல்பு மொழியாதலின், அதில் ஒவ்வொரு வேற்றுமையையும் பெரும்பாலும் பொருள்தரும் பல சொற்கள் உணர்த்துகின்றன. ஆரிய மொழிகளோ திரிபு மொழிகளாதலின், அவற்றுள் ஒவ்வொரு வேற்றுமையையும் பொருள்மறைந்த ஒரே உருபு உணர்த்துகின்றது. தமிழர் வேற்று நாட்டினின்று வந்தவரென்றும், நாகரிகத்தில் ஆரியரினும் தாழ்ந்தவரென்றும் இரு தவறான கருத்துகள் கால்டுவெலார் உள்ளத்தில் குடிகொண்டி ருந்தமையே, அவர் தமிழைப் பிறழ வுணர்ந்ததற்குக் கரணியமாம்.

     வேற்றுமை வடிவைக் குறிக்கும் உருபு என்னும் சொல்லை நோக்கினும், அது தூய தமிழே. உருத்தல்=தோன்றுதல். உரு=தோற்றம், வடிவு, வடிவுடைப் பொருள். உரு-உருவு-உருபு. ஒ.நோ: அளவு-அளபு. உருவு-உருவம்-ரூப (வட சொல்).

     வேற்றுமை மயக்கம் என்பது, உருபு மயக்கம், பொருள் மயக்கம் என இரு வகைப்படும். இவ் வேறுபாட்டைப் புலவர் அருணாசலனார் எடுத்துக்காட்டி யிருப்பது பாராட்டத்தக்கது.

செய்வினை, செயப்பாட்டுவினை

     தமிழிற் செய்வினை போன்றே செயப்பாட்டுவினையும் உண்டென்பது, வழக்கினாலும்,

  "வினையே செய்வது செயப்படு பொருளே"
................ .................. ..................... .................
ஆயெட்டென்ப தொழின்முத னிலையே"

(596)

  "செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே."

(731)

என்னும், தொல்காப்பிய நூற்பாக்களாலும், அவற்றிலுள்ள "செயப்படு பொருள்" என்னும் சொல்லாட்சியாலும், அறியப்படும்.

     ஆயினும், தமிழில் உண்மையானபடி செயப்பாட்டுவினையே இல்லை யென்று கால்டுவெலார் தவறாகக் கொண்டார். இதற்குத் தமிழிற் செயப்பாட்டு வினையின் அருகிய வழக்கும் அதன் பல்வேறு வகையுமே கரணியம் (காரணம்).