முனியப்பன், கர்த்தாரப்பட்டி. |
* தி. மு. கழகத்தைப் பற்றித் தங்கள் கருத்தென்ன? |
தி. மு. கழகம் தமிழ் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புள்ள தலைமையான எதிர்ப்புக் கட்சி. |
அறிவன், பறம்பை. |
* சங்கினம் கூடி வாழ்வதால் 'சங்கம்' என்ற சொல் தமிழ்க் கழகத்தைக் குறிப்பதாகக் கொள்வது பொருந்துமா? |
கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்னும் சொல் sangha என்னும் வட சொல்லின் திரிபாகும். நந்தைக் குறிக்கும் சங்கம் என்பதே, வட சொல்லாகக் கூறப்படினும், தூய தென்சொல்லாம். |
சுரி-சரி-சருக்கு, சருக்குதல் = வளைதல் சருக்கு + அம் = சருக்கம் (வட்டம்). சருக்கு + அரம் = சருக்கரம்-சக்கரம் = வட்டம். வண்டி (Wheel). சருக்கரம்-சருக்கரை = வட்டமான அச்சு வெல்லம். ஓ நோ: வட்டு = வட்டமான பனை வெல்லம். |
சருக்கரை-சர்க்கரை-சக்கரை. சர்க்கரை யென்பது பிற்காலத்தில் பிற வடிவான வெல்ல அச்சுக்களையும் உதிரி வெல்லத்தையும், மணற் சீனியையும் குறித்தது. சக்கரம்-அக்கரம்-அக்காரம் = சர்க்கரை. |
சருக்கு-சக்கு-செக்கு = வட்டமாய் ஆடும் எண்ணெய் ஆலை. |
சக்கு-சங்கு = வலமாகவும் இடமாகவும் வளைந்தது (வலம்புரி, இடம்புரி) |
ஓ.நோ: புரி = சங்கு, வளை = சங்கு. புரிதல் = வளைதல். |
சங்கு-சங்கம் = பெரிய சங்கு, சங்கு. 'அம்' என்பது ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு. எ-டு: நிலை-நிலையம், மதி-மதியம், விளக்கு-விளக்கம். |
அறிவரசி, இளையான்குடி. |
* சொல்லின் செல்வர் இரா. பி. சேது (ப்பிள்ளை) தமிழுக்குச் செய்த தொண்டுபற்றி உங்கள் கருத்தென்ன? |
எனது 'சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு' என்னும் திறனாய்வுச் சுவடியைப் பார்க்க. |
* தமிழ்நாட்டின் எதிர் காலம் எப்படியிருக்கும்? |
தமிழ் மக்களின் உணர்ச்சிக்குத் தக்கபடி யிருக்கும். |
மெய்ம்மொழி, முகவை. |
* வையாபுரி (ப்பிள்ளை) 'ஆரிய அடிமை' என்பது தவிர அவர் சிறந்த ஆராய்ச்சியாளர் என்றும் அவரும் பலவகையில் தமிழ்ப்பணி புரிந்துள்ளார் என்றும் ஒப்புக்கொள்ளலாமா? |
ஆரிய வடிமைப்பட்ட தமிழ்ப் பகைவர் எங்ஙனம் தமிழ்ப்பணி புரிந்திருக்க முடியும்? |