பக்கம் எண் :

79

12
தமிழ் ஆரியப் போராட்டம்

     மூவாயிரம் ஆண்டுகட்குமுன் ஆரியர் தென்னாடு வந்து தம்மை நிலத்தேவரென்றும் தம்மொழியைத் தேவமொழியென்றும் சொல்லியே மாற்றித் தமிழைக் கெடுத்துத் தமிழரையும் இழிதிற அடிமைப்படுத் தியபின், முதன் முதலாகத் திருவள்ளுவர் ஆரியத்தைக் கண்டித்துக் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தமிழ் ஆரியப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில், "ஆரியம் நன்று தமிழ் தீது;" எனவுரைத்த குயக்கோடனை நக்கீரர் சாகவும் எழவும் பாடியதினின்று, தமிழ் - ஆரிய மொழித் துறைப் போராட்டம் தொடங்கிற்று.

     நீண்ட காலமாக நீறுபூத்த நெருப்பாயிருந்துவந்த மொழிப் போரனலை, 1891ஆண்டிற் சுந்தரம் பிள்ளையும், 1899ஆம் ஆண்டிற் பரிதிமாற்கலைஞனாரும், கிண்டிக் கிளரச் செய்தனர். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தால் கொழுந்துவிட்டுப் பெரும் பிழம்பாக எரிய வைத்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்.

     அரசியல் துறையில் திரவிட-ஆரியப் போராட்டத்தைத் திறம்பட நடத்தி நயன்மைக் கட்சியை நிறுவி வெற்றி கண்டவர், வயவர் (Sir) தியாகராச செட்டியாரும் (T.M.) மாதவன் நாயரும் ஆவர். தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்க்கு மேல்வகுப்பு மாணவர் கல்வி நிலையங்களில் இடங்கிடைத்ததற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் பிற்பட்ட வகுப்பார்க்கும் கல்வி நிலையங்களிலும் அரசினர் அலுவல் துறைகளிலும் ஆட்சி மன்றங்களிலும் குறிப்பிட்ட தொகையான இடங்கள் ஒதுக்கப் பட்டிருப்பதற்கும், படிப்புதவி யளிக்கப்பட்டு வருவதற்கும், சென்னை மாநகராட்சித் தலைவர் பதவி வகுப்பு வாரியாகச் சுழன்று வருவதற்கும், இற்றைத் தமிழ்நாடு பிராமணரில்லாத அமைச்சுக் குழுவால் ஆளப் படுவதற்கும், கேரளம் கன்னடம் ஆந்திரம் ஆகிய திரவிட நாடுகளில் திரவிடரே முதலமைச்சராதற்கும், அடிப்படைக் கருவியாயிருந்தது, 1920 முதல் 1937 வரை 17 ஆண்டு இரட்டையாட்சியைத் திறம்பட நடத்தி அரும்பெரும் தொண்டாற்றிய நயன்மைக் கட்சியே (Justice Party). பேராய ஆட்சியிலும், தாழ்த்தப்பட்டவரும் பிற்பட்டவருமான தமிழரும் திரவிடரும், பெரும்பதவிகளும் பல்வேறு சலுகைகளும் பெற்றது நயன்மைக்கட்சித் தொண்டின் விளைவே.

     1925 முதல், குமுகாயத்துறையில், முன்பு தன்மான (சுயமரியாதை) இயக்கமும் பின்பு பகுத்தறிவியக்கமுங் கண்டு ஒப்புயர்வற்ற தொண்டாற்றி வருபவர் ஈ. வெ. ரா. பெரியார்.