பக்கம் எண் :

126தமிழ்நாட்டு விளையாட்டுகள்

5. புலியும் ஆடும்

     பல பிள்ளைகள் வட்டமாய்க் கைகோத்து நிற்க, ஒரு பிள்ளை உள்ளும் மற்றொரு பிள்ளை வெளியும் நிற்பர். உள் நிற்கும் பிள்ளை ஆடாகவும், வெளி நிற்கும் பிள்ளை புலியாகவும், பாவிக்கப் பெறுவர். புலிக்கும் வட்டமாய் நிற்கும் பிள்ளைகட்கும் பின் வருமாறு உரையாட்டு நிகழும்:
   புலி : சங்கிலி புங்கிலி கதவைத் திற.
   பிள்ளைகள் : நான்மாட்டேன் வேங்கைப்புலி.
   புலி : வரலாமா? வரக்கூடாதா?
   பிள்ளைகள் : வரக்கூடாது.
     பிள்ளைகள் வழிமறுத்தபின், புலி யாரேனும் இருபிள்ளைகட் கிடையில் நுழையப் பார்க்கும். பிள்ளைகள் இடம் விடுவதில்லை. பலமுறை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபின், புலி திடுமென்று ஓரிடத்தில் வலிந்து புகும். உடனே ஆடு வெளியே விடப்பெறும். புலி ஆட்டைப் பிடிக்க வெளியேறும். ஆடு மீண்டும் உள்ளே விடப்பெறும். இங்ஙனம் மாறிமாறி இரண்டொருமுறை நிகழ்ந்து பின், இறுதியில் புலி ஆட்டைப் பிடித்துக்கொள்ளும்.
     இவ் விளையாட்டின் தோற்றம் வெளிப்படை. வட்டமாய் நிற்கும் பிள்ளைகள் ஆட்டுத் தொழுவத்தை நிகர்ப்பர்.