தமிழ்நாட்டு விளையாட்டுகள் | 17 |
2. தெல் | தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல். | கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி ஆட்டு வகையாலும் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு. ஆயினும், கருவி வேறுபாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம். இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும்போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும் போது அது மேனோக்கி நிற்கும். | தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு. | தெல்லுக்காய் குறிஞ்சிநிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெறிக்கப் படுவது என்னும் பொருட்காரணத்தையுடையது. | | |
|
|