பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்21

     ஒரு குறவனும் அவன் கையாளான சிங்கன் என்னுங் குளுவனும் குறுந்தடிகொண்டு வேட்டையாடின், குறவன் புதர் புதராய்க் குறுந்தடியால் தட்டிப் பார்ப்பான். ஒரு புதரினின்று திடுமென்று ஒரு காட்டுக் கோழி பறக்கும்; அல்லது ஒரு முயல் குதிக்கும். அந் நொடியே, குறவன் அதைக் குறுந்தடியால்
அடிப்பான்; அல்லது எறிவான். கோழி அல்லது முயல் அடிபட்டுச் சற்றுத் தொலைவிற் போய் விழும். குளுவன் ஓடிப்போய் அதை எடுத்து வருவான்.
வேறு நிலத்தினின்று இருவர் வேட்டையாடச் செல்லினும் இவ்வகையே நேரும்.
     இத்தகை வேட்டை வினையையே சில்லாங் குச்சுக் குறிக்கின்றது. குச்சை யடிப்பவன் அதைத் தட்டியெழுப்புவது, குறவன் புதரைத் தட்டிக் கோழி முயலை
யெழுப்புவது போன்றது. குச்சை மீண்டும் அடிப்பது, அவ் வுயிரிகளைக் குணிலால் அடிப்பதும் எறிவதும் போன்றது. குச்சு தொலைவிற் போய் விழுவது,
அடிபட்ட வுயிரிகள் தொலைவிற்போய் விழுவது போன்றது. குச்சை எடுப்பவன் அதை எடுத்தெறிவது, அடிபட்டு விழுந்த வுயிரிகளைக் குளுவன்
எடுத்தெறிவது அல்லது எடுத்து வருவது போன்றது.
     ஆட்டின் பயன் : மேலெழும் ஒரு பொருளை விரைந்து குறிதப்பாது வன்மையாய் அடிப்பதும்; வானின்று விழும் பொருளை அது தகாத இடத்தில்
விழுமுன்னும், தாழப் பறக்கும் பறவையை அது தன்னைவிட்டுக் கடக்குமுன்னும் பிடிப்பதும்; தொலைவிலுள்ள பொருளைக் குறிதப்பாது ஒரு கருவியால்
அடிப்பதும்; ஒரு பொருளைத் தொலைவிலுள்ள குறித்த இடத்தில் எறிவதும்; ஒரு குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப்பயிற்சியே இவ்
ஆட்டின் பயனாம்.
(2) சோழ கொங்குநாட்டு முறை

I. கில்லித்தாண்டு

     பாண்டிநாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு நாட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றே. ஆயினும், இடவேறுபாடு காரணமாக, ஈரிட ஆட்டிற்கும் பின்வருமாறு
சில வேற்றுமைகள் உள:
     (1) பெயர் : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது தாண்டு என்றும் வழங்கும்.