பக்கம் எண் :

34தமிழ்நாட்டு விளையாட்டுகள்

மட்டை வீழ்த்தினும் சரட்டை போக்கினும், கீழேயிருக்கும் பம்பரத்திற்குப்
பதிலாகத் தன் பம்பரத்தை வைத்துவிடல் வேண்டும். கீழேயிருந்த பம்பரக்காரன் அதை எடுத்துப் பிறர்போல் ஆட்டுவான்.
     பம்பரம் தலைகீழாய் விழுதற்கு மட்டை என்றும், பக்கமாக உருண்டுபோதற்குச் சாட்டை என்றும் பெயர்.
     யார் பம்பரம் எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போகப்பட்டதோ, அது உடனே பிறரால் உடைக்கப்படும்.

III. பம்பரக் குத்து

     ஆட்டின் பெயர் : தோற்றவனது பம்பரத்தைக் குத்தி யாடும் ஆட்டுப் பம்பரக்குத்து எனப்படும்.
     ஆடுமுறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி, அபிட்கோசெடுத்து, அதில் மிகப்
பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்த பின், ஏனையோரெல்லாம் ஒவ்வொருவ னாகத் தன் தன் பம்பரத்தாற் குத்தி அதை வெளியேற்றுவர்.
அது வெளியேற்றப்படின், உடனே மீண்டும் முன்போல் அபிட்கோ செடுத்து, அதிற் பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்தல் வேண்டும்.
ஏனையரெல்லாம் முன்போற் குத்தி அதை வெளியேற்றுவர்.
     மட்டை வீழ்த்தியவன் பம்பரமும், சாட்டை போக்கியவன் பம்பரமும் வட்டத்துள் ஏற்கெனவே வைத்திருப்பதுடன் சேர்த்து வைக்கப்படும்.
     வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் ஒன்று வெளியேறி யாடும்போது, அதை வட்டத்துள் வைத்திருக்கும் பம்பரக்காரன் சாட்டையால் தன் கையிலேற்றி ஆட்டின், அதுவும் வட்டத்துள் வைக்கப்படல் வேண்டும்.
     வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் எதையேனும், வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரக்காரன், தன் கையாலழுத்திப் பதித்துவிடின், அதை
எடுத்தல்கூடாது.