"நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்" என்னும் பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) "நெடுநாட்பட அடைமதிற் பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடு கண்டாற்போன்ற..... இடைமதில்" என்ற அந் நூலின் பழையவுரையாசிரியர் விளக்க வுரை கூறியிருப்பது, இங்கே கவனிக்கத் தக்கது. |
காலில் திரியெறிதல், உழிஞையார் (அதாவது முற்றுகை யிட்டிருப்பவர்) நகரத்துள் எறியும் எரிவாணத்தைக் குறிக்கலாம். இப்போது வேடிக்கைக்காக விடப்படும் எரிவாணம் (வாணக் கட்டு) பழங்காலத்தில் நொச்சி நகருள் எரியூட்டுவதற்கு விடப்பட்டதாகத் தெரிகின்றது. |
விளையாட்டிற் காணங் கட்டியபின் குதிரையேறுவது, நொச்சி மறவர் காணம் விளைத்துத் தம் குதிரைகட்கு வைத்த பின், அவற்றின் மேலேறி நகருக்கு வெளியே போருக்குப் புறப்பட்டு வருவதைக் குறிக்கலாம். |
ஆட்டின்பயன் : காலால் ஒரு பொருளைப் பற்றுவதும் கரணம்போட்டுத் தாண்டுவதுமாகிய வினைப்பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். |