பக்கம் எண் :

6தமிழ்நாட்டு விளையாட்டுகள்

     ஒருவன் தன் கோலியால் அடிக்கும்போது, அதை வழிச்செல்வோர் யாரேனும் தடுத்துவிடின், அடிப்பவன் "தடுத்தால் தூர்" என்று சொல்வான். அதன்பின்,அவ்வழிச் செல்வோர் தம் காலால் அதைத் தள்ளும்படி வேண்டப்படுவர்.
     அடிக்கப்படும் கோலி உத்திக்குக் கிட்டே இருக்கும் போது அதற்குரியவன் அவ்விடத்தினின்று உத்திக்குத் தாண்டிவிடின், அடிப்பவன் தன் கோலியைத் தன் கண்ணில் வைத்தாவது உயர்த்திய கையில் வைத்தாவது எதிரியின் கோலியின் மேலிட்டடித்தல் வேண்டும். அவ் அடி தவறின், மீண்டும்
நிலமட்டத்திற் கையால் தெறித்தடிக்கலாம். அவ் வடியும் தவறின் தோல்வியாம்.
     மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியைத் தொடர்ந்து மூன்று தரம் அடித்துவிடின் எதிரி தன் கோலியைத் தன் முட்டிக்கையால் ஒரு தடவை அல்லது பல தடவை தள்ளிப் பேந்தாவிற்குள் கொண்டுவந்து நிறுத்தல் வேண்டும். அங்ஙனம் நிறுத்திவிடின், அவனே கெலித்தவ னாவன்;அல்லாக்கால் தோற்றவனாவன். முட்டிக்கையால் கோலியைத் தள்ளுவதை முட்டிதள்ளல் என்பர்.
(ii) வட்டப்பேந்தா
     ஆட்டின் பெயர் : பேந்தா எனப்படும் வட்டக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு வகை வட்டப் பேந்தாவாம். இது சதுரப் பேந்தாவுடன் ஒப்புநோக்கி வட்டப் பேந்தா எனப்பட்டது.
     ஆடுவார் தொகை : மூவர் முதல் எத்துணைப் பேராயினும் இதை ஆடலாம். ஆயினும், ஐவர்க்குக் குறையாதும் பதின் மர்க்குக் கூடாதும் இருப்பின் சிறப்பாம்.
     ஆடுகருவி : ஆடகருள் ஒவ்வொருவனுக்கும் பல கோலிகள் இருத்தல் வேண்டும். அவற்றோடு தெல் என்னும் ஒரு பெருங்கோலி
ஒவ்வொருவனிடத்துமாவது எல்லார்க்கும் பொதுவாகவாவது இருத்தல் வேண்டும்.