உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும் வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டே யிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும். |
ஒருவன் கெலித்தவிடத்து இன்னொருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்;அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான். |
எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதியாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்டவெல்லாம் கெலிப்புக் காயாகும். |
ஆட்டின் பயன் : கோலியாட்டின் பொதுப்பயனாக முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம். |
II. அஞ்சல குஞ்சம் |
ஆட்டின் பெயர் : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது 'அஞ்சல குஞ்சம்' என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர்மொழியையே பெயராகக் கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது 'ஒற்றைக் குழியாட்டம்' எனவும்படும். |
ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். |
ஆடிடம் : பேந்தாவிற்குரியதே இதற்கும். |
ஆடுகருவி : பாண்டிநாட்டுக் கோலியாட்டிற்குக் கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். |
ஆடுமுறை : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலைவிலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும். |