குயில், தினசரி, புதுவை, நாள் : 11.10.48; பக்.2-3
பிரி்ட்டிஷ் ஆட்சி, நேரிடையாக இந்தியாவில் இருந்த நாட்களில் அங்குள்ள பார்ப்பனர் உத்தியோகங்களை யெல்லாம் கைப்பற்றிக் கொண்டார்கள். நல்ல நிலையை அடைந்தார்கள். எங்கும் அவர்கள்! எதிலும் அவர்களின் அதிகாரம்! இதை மறுக்கமுடியாது. பிரஞ்சிந்திய சர்க்காரில் இங்குள்ள உயர்சாதிக் கிறிஸ்தவர்கள் உத்தியோகங்களை அடைந்தார்கள், நல்ல நிலையில் இருக்கிறார்கள எங்கும் அவர்கள். எதிலும் அவர்கள் அதிகாரம்! இதை மறுக்க முடியாது பிரிட்டிஷ் ஆட்சியானது நாளடைவில், இந்திய மக்களிடம் தன் சமநோக்கத்தைக் காட்டத் தொடங்கியது அது மக்கள் நிகர் என்றது. எல்லாரும் அரசியலில் பங்கு பெறலாம் என்று கூறும் நிலையை அடைந்தது. இது பார்ப்பனர்க்குப் பிடிக்கவில்லை. ஏன்? இருக்கும் உத்தியோகத்தை - பதவிகளை - எல்லாருக்கும் அல்லவா பங்கிட வேண்டும்? முஸ்லீம்களும், கிருஸ்துவர்களும், பார்ப்பனரல்லாத பெருமக்களும் சமம் என்றால் பார்ப்பனர்பாடு ஆபத்துத்தானே? அதனால் பார்ப்பனர், பிரிட்டிஷ் ஆட்சியைத் தொலைத்து விடத்தான் வேண்டும் என்று கூச்சலிட்டார்கள். இது பிரிட்டிஷ்காரனுக்குத் தெரியும். அவன் என்ன செய்தான்? உத்தியோகத்தைப் பங்கிட்டுத் தரும் அதிகாரத்தைப் பார்ப்பனர்கள் கையிலேயே கொடுத்துவிட்டுத் தன்னைவிட்டு இந்தியாபோய் விடாமலிருப்பதற்கு மட்டும், மறைவான - ஆனால் மறுக்க முடியாத நிலையில் தன் சங்கிலியின் கொக்கியை இந்தியாவின் தலையில் பொருத்திவிட்டுப் போய்விட்டான்! அதனால் பார்ப்பனருக்கும், இந்த உண்மையை உணரமாட்டாத பார்ப்பனக் கூலிகட்கும் இப்போது மிக்க மகிழ்ச்சி. இதைத்தான் அவர்கள் சுயராஜ்யம் வந்துவிட்டது. வந்துவிட்டது என்று கூறிக் கொண்டிருக் கிறார்கள். மௌண்ட்பேட்டன் இடம் ராஜகோபலாச்சாரிக்கு வந்து விடவில்லையா? மற்றும் எல்லாப் பார்ப்பனரும் எல்லா இடத்திலும் குந்திக் கொம்மாளம் அடிக்க வில்லையா?
|