யாண்டும், கொல்லம்
ஆண்டும், கலியாண்டும் உதாரணமாகும். ஆங்கில முகம்மதிய ஆண்டுகளும் பெரியார் காலத்தினின்றும்
கணக்கிடப் படுவனவே.
அறுபதாண்டிற்கு மேற்பட்ட
ஊழி என்னும் அளவு, பண்டைத் தமிழ் நாட்டில் நிகழ்ந்த சில கடல்கோள்கள்பற்றி, ஒரு வரையறையின்றி
ஈரழிவிற்கிடைப்பட்ட அல்லது ஒரு விரி வளர்ச்சியை
குறிக்கின்ற ஒரு நெடுங்காலத்தைக் குறிக்க அல்லது கணிக்க வழங்கிவந்தது. இது "இவ் வாசிரியர்(தொல்காப்பியர்)
ஆதியூழியின் அந்தத்தே இந் நூல் (தொல் காப்பியம்) செய்தலின்" என்று நச்சினார்க்கினியர்
தொல்காப்பியக் கற்பியல் 4ஆம் சூத்திர வுரையிற் கூறுதலானும், ஐம்பூதங்களில் ஒவ்வொன்றும்
ஒவ்வோர் ஊழியில் தோன்றிற்றென்று பரிபாடல் (2 : 3-19) கூறுதலானும் அறியப்படும். ஆகையால்
இதுபோது பஞ்சாங்கத்திற் குறிக்கப்பட்டுள்ள யுக அளவு தமிழர் ஊழிக்குப் பொருந்துவதன்று; தமிழ்
நாட்டுக் கடல்கோள் களின் இடைக்காலங்கள் அவ்வக் காலத்திற் கணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்,
அதைப்பற்றிய ஒரு குறிப்பும் நமக்குக் கிடைத்திலது. இற்றைக் கலியூழி தலைச்சங்கத் திறுதியில்
நிகழ்ந்த கடல் கோளினின்றும் கணிக்கப்பட்டதாயின், கலியுகம் தொடங்கி 5041 ஆண்டுகள் ஆயின
என்னும் கணக்குப் பொருந்துவதாகும்.
மேற்கூறிய காலப்
பெயர்களுள் 'காலம்' என்னுஞ் சொல்லையே சிறப்பாகக் கூற எழுந்த திக் கட்டுரையாதலின், அதன்
மூலத்தையும் அது எம்மொழியைச் சேர்ந்ததென்பதையும் இனி ஆராய்வோம்.
காலம் என்னும்
சொல், கால் என்னும் மூலத்தினின்றும் பிறந்தது. இது கால் எனுஞ் சொல் தனித்தும், ஒருகால்,
வந்தக்கால் எனத் தொடர் மொழிகளிலும் வந்து காலப்பொருள் தருவதால் அறியப்படும். தூண் என்பது
'அம்' ஈறு பெற்றுத் தூணம் என்று ஆனாற்போலக் கால் என்பதும் 'அம்' ஈறு பெற்றுக் காலம் என்றாயது.
'ஐ' ஈறுபெறின் காலை என்றாகும்; பார் (கம்பி) என்பது பாரை என்றானாற்போல.
கால், காலை, காலம்
என்னும் மூன்று சொற்களும் தமிழில் இருவகை வழக்கிலும் மிகப் பெருவழக்காக வழங்கிவருகின்றன.
கால் என்பது 'ஒருகால்'
'முக்காலும்' என்னும் தொடர்களிலும், 'வந்தக்கால்' 'போனக்கால்' என எதிர்கால வினையெச்சங்களிலும்
உலக வழக்கில் வழங்குகின்றது. இவ் வினையெச்சங்களை 'வந்தாக்கா' 'போனாக்கா' என்று சிதைத்து
வழங்குவர் தமிழ்நாட்டின் வடமேற்பகுதியி லுள்ளவர்
"பின்முன் கால்கடை
வழிஇடத் தென்னும்
அன்ன மரபிற் காலங் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றியல் பினவே"
(தொல்.
சொல். 714)