மறைமலையடிகளின் மும்மொழிப் புலமை
இவ்
விருபதாம் நூற்றாண்டில் ஈடும் எடுப்புமின்றித் திகழ்ந்த
மாபெரும் புலவர் மறைமலையடிகள் என்பது, எல்லார்க்கும்
ஒப்ப முடிந்தவுண்மையாகும்.
உலக
மொழிகள் (ஏறத்தாழ) மூவாயிரத்துள், ஒருபோதும்
வழங்கா இலக்கியப் பெருமொழி யென்னும் வகையிற்
சமற்கிருதமும், என்றுமுள்ள உலகமுதல் உயர்தனிச் செம்மொழி
யென்னும் வகையில் தமிழும், உலகப் பொதுக் கலவைப்
பெருமொழி யென்னும் வகையில் ஆங்கிலமும், தலைசிறந்த
மொழிகளாகும். இம் மூன்றும் ஒருங்கே கைவந்தார் பலர்
இருந்தாரேனும், அவரனைவருள்ளும், எவரெத்து (Everest)
என்னும் வெள்ளிமலைபோ லுயர்ந்தும், அமேசான் (Amazon)
என்னும்
அமெரிக்க ஆறுபோ லகன்றும், அமைதி வாரியின் (Pacific
Ocean)
தென்னகழி
போலாழ்ந்தும், பிறங்கித் தோன்றிய பெரும்
புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே யென்பது, மிகையாகாது.
தமிழ்ப் புலமை
தமிழகத்துத் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த புலவர்
பல்லா
யிரவருள் ஒவ்வொருவரும்,
"வான்குருவி யின்கூடு வல்லரக்குத்
தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது"
(ஒளவை.
தனிப்.)
என்னும்
இயற்கை நெறிக்கிணங்க, ஒவ்வொரு துறையிலேயே வல்லுநரேனும்,
அடிகள் எல்லாம் வல்ல இறைவனருளால் இந் நெறிக்கு
விலக்காகவே படைக்கப்பட்டாரென்பது, வெள்ளிடைமலை.
"எத்துணைய
வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்துஞ்
சொல்வன்மை யின்றெனி னென்னாமஃ துண்டேற்
பொன்மலர் நாற்ற முடைத்து."
அடிகட்குக் கல்வன்மையோடு சொல்வன்மையுங் கலந்திருந்த
தனால் அவர் கல்வி நன்மணப் பொன்மலராயிற்று. |