பக்கம் எண் :

32பாவாணர் நோக்கில் பெருமக்கள

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு! அடிப்படை எவர்பட்ட அரும்பாடு?

"வையம் ஈன்றதொல் மக்கள் உளத்தினைக்
கையி னாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை அசைத்த பழந்தமிழ்
ஐயை தாள்தலை கொண்டு பணிகுவாம்"

உலகமுதல் உயர்தனிச் செம்மொழியும் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான குமரித்தமிழ்; தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு ம. கோ. இராமச்சந்திரன் என்னும் அழகமதியார், இதுவரை இத்தகைய மாநாடு இம் மாநிலத்தில் எம் மொழிக்கும் எங்கும் நடந்ததேயில்லை யென்று எவரும் வியக்குமாறு, அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் மாடமதுரையில் மாபெருஞ் சிறப்பாக நடத்த விருக்கும் உலகத் தமிழ் மாநாட்டால், மாட்சிமைப்படவிருப்பது மட்டில்லா மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சியே.

ஆயினும், மூவாயிரம் ஆண்டாக வரலாறு முற்றும் மறையுண்டும், அடிப்படை முதனூலனைத்தும் வாரிகளாலும் ஆரியராலும் அழியுண் டும், வழிபாட்டிற்குத் தகா மொழியெனத் தள்ளுண்டும், இழிந்தோன் மொழியெனப் பழியுண்டும், வரவரச் சொல் வழக்கொழிந்து வறுமையுண் டும், தலைமைப் புலவர்க்கும் கழக (சங்க) நூல் தெரியாது கரவுண்டும், ஐயெழுத்து மொழியென்றும் ஆரிய வழிமொழியென்றும் வையாபுரி களால் வசையுண்டும், இரங்கத்தக்க நிலையிற் கிடந்த இம் மொழி, இன்று இத்தகைய பெருமையை மீண்டும் பெறுதற்குத் தக்க காரணங்கள் இருத்தல் வேண்டும்.

கடைக்கழகக் காலத்தில், பிராமணன் நிலத்தேவன் என்றும், அவன் முன்னோர் மொழியுடன் வடநாட்டுப் பிராகிருதங் கலந்த வேத மொழியும், அதனொடு தமிழ் கலந்த சமற்கிருதம் என்னும் உலகியல் இலக்கிய மொழியும், தேவமொழியென்றும், இரு நச்சுக் கருத்துகள் மூவேந்தர் உள்ளத்திற் பசுமரத் தாணிபோற் பதிக்கப்பட்டு, ஆரியம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தபோதே, நக்கீரர் என்னும் வேளாளப் பிராமணர் "ஆரியம் நன்று; தமிழ் தீது" என வுரைத்த குயக்கொண் டானைச் சாவித்தும் உயிர்ப்பித்தும், தென்மொழியே தேவமொழி யென்று வலியுறுத்தினார்.