மகிழ்ச்சிச் செய்தி
பண்டாரகர் பட்டம் பெற்ற பெருந்தமிழ்ப்
புலவருள் பிறவியி லேயே தமிழ்ப்பற்றுத் ததும்பப்பெற்ற
மூவருள் ஒருவரும், காரைக்குடி அழகப்பனார் கலைக்கல்லூரி
முதல்வரும் ஆகிய, பேரா. வ.
சுப. மாணிக்கனார்
அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்
தலை வராக அமர்த்தப் பெற்றமை, இதுவரை அங்குத்
தமிழுக்கு நிகழ்ந்த தீங்குகட்கெல்லாம் கழுவாய்
என்றும், தமிழுக்கு நற்காலம் வருதற்கு முற்குறி
என்றும், அறிந்து மட்டிலா மகிழ்ச்சி
கொள்கின்றோம்.
அப் பல்கலைக்கழக நிறுவனர் போன்று இளமையில்
அண்ணா மலை யென்று பெயர் வழங்கப்பெற்று, இன்று
தில்லைக் கூத்தன்போல் மாணிக்கம் என்று பெயர்
பூண்டுள்ள, இவர்தம் கல்விப் பரப்பும், பட்டச்சிறப்பும்,
பேராசிரிய வூழியமும், முதற்றரக் கல்லூரி முதல்வர்
பதவிப் பட்டறிவும். பணித் திறமையும்,
ஆள்வினை யாற்றலும், தமிழ்த் தொண்டும், ஆன்றவிந்
தடங்கிய சான்றாண்மையும் நோக்கின், நாள டைவில்
அப் பல்கலைக்கழகத் துணைக்கண்காணகராகக்
கிளர்வதற்கே இறைவனால் அமர்த்தப் பட்டிருப்பதாகத்
தெரிகின்றது.
தமிழ்ப் பகைவரால் தடைப்பட்டுள்ள செந்தமிழ்ச்
சொற் பிறப்பியல். அகரமுதலியைத் தக்காரைக்
கொண்டு தொகுப்பித்தும், பல்கலைக்கழக
முன்னை வகுப்பையும் (P.U.C.)
கலையிளைஞன் பட்ட வகுப்பையும் (B.A)
ஆங்கிலர் காலத்திற் போன்றே ஈராட்டைக்
கடவை களாக மாற்றியும், தமிழ்நாட்டு ஏனையிரு
பல்கலைக்கழகங்களும் பின் பற்றும் வகையில்
சீர்திருத்தத் திட்டங்களை வகுத்து வழிகாட்டுமாறு,
எல்லாம் வல்ல இறைவன் இவர்க்கு நீடிய
வாழ்வும் கூடிய நலமும் அருள்வானாக.
- "தென்மொழி"
மேழம் 1970 |