பக்கம் எண் :

78பாவாணர் உரைகள்

9

தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா

தமிழவேள் கலைஞர் அவர்களைப் பற்றி பலர் பலபடப் பாராட்டிப் பேசி விட்டார்கள். பலர் இன்னும் அவருடைய ஆற்றலை அறியவில்லை என்றே உணர்கின்றேன். பழைமை நிலைமையை நினைத்துக் கொண்டு அந்தப் பட்டத்தைப் பற்றி தகுமோ தகாதோ என்று ஏதோ பேசுவது போல் தெரிகின்றது. பல்கலைக் கழகங்களிலே எல்லாக் கலைகளும் கற்பிக்கப்படுவது இல்லை. பல கலைகள் கற்பிக்கப்படுகின்றன. அத னாலேதான் அதற்குப் பல்கலைக் கழகம் என்று பெயர். அதிலே கற்பிக்கப்படாத பல கலைகள் இருக்கின்றன. ஆகையால் அந்தக் கலைகளிலே தேர்ச்சி பெற்றவர்கட்கு அவர்களுக்குத் தகுந்த பட்டங்கள் அளிப்பது தகுதிதான்.

ஆட்சிக் கலையில் சிறந்தவர்

நம் தமிழவேள் அவர்கள் வெளிப்படையாக தன்னுடைய திறமையைக் காட்டிக்கொண்ட கலைகள் மூன்று. 1. திரைப்படக்கலை. 2. செய்யுட்கலை. 3. ஆட்சிக்கலை. இந்தத் திரைப்படக் கலையைப் பற்றித்தான் கலைஞர் என்று பொது மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது. அடுத்து செய்யுட் கலையை அமெரிக்கத் தலைவர் அறிஞர் ஒருவர் பாராட்டி அவருக்குப் பட்டம் அளித்துவிட்டுப் போய் விட்டார்கள். ஆட்சிக் கலையைப்பற்றித்தான் சொல்ல விரும்புகின்றேன்.

இப்பொழுது அவர்கள் அரசப் பதவியிலே இருக்கின்றார்கள். நம் இந்திய அரசு ஒரு கூட்டரசு. பன்மொழி நாட்டுக் கூட்டரசு. அதில் அவர்கள் பெயரளவிலே முதலமைச்சராய் இருந்தாலும் செயல் அளவிலே ஒரு அரசருமாய் இருக்கின்றார்கள். அந்தப் பதவியில் அரசு அமைச்சு என்ற இரண்டும் கலந்திருக்கின்றன.

கவர்னர் அவர்கள் ஆளுநர் என்ற பெயரளவிலேதான் அரசர். நடுவண் அரசுக்கும் இந்த நாட்டு அரசுக்கும் ஒரு இணைப்பு அதிகாரி யாக இருக்கின்றார்கள். ஏதேனும் இடையிலே சட்டமன்றத்திலே ஒரு குழப்பம் ஏற்பட்டால் அந்தச் சமயத்தில் அமைதியை நிலைநிறுத்தும் பொறுப்பு அதிகாரியாக இருக்கின்றார்கள். சட்டமன்றத்தில் அங்கே அரசன் போல் வீற்றிருந்து இந்த நாட்டுக்குரிய சட்டங்களை எல்லாம் நிறைவேற்றுகின்றவர் முதலமைச்சர்தான்.