பக்கம் எண் :

20மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

4. வாய்ச்செய்கை யொலிச்சொற்கள்

     மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும்
சில செய்கைகளும் சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற் கேற்ற
வாய்வடிவை யமைத்து, அவ் வொலிகளின் வாயிலாய் அச் செயல்களைக்
குறிக்கும் சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான அவ்
வொலிகள் வாய்ச்செய்கை யொலிகளாம். அவற்றுள் ஒன்று இங்கு
விளக்கப்பெறும்.

அவ்(வு)

     ஒன்றைக் கவ்வுதலை யொத்த வாய்ச்சைகைநிலை, அவ் என்னும்
ஒலியைத் தோற்றுவித்தற் கேற்றதாதல் காண்க. மேல்வாய்ப் பல்
கீழுதட்டொடு பொருந்துவதே கவ்வும் நிலையாம். இந் நிலை வகரமெய்
யொலிப்பிற்கே ஏற்கும்.

     "பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்"(தொல். 98)
     "மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே."(நன். 85)

     அவ் - கவ் - வவ்.

     அவ் - அவ்வு - கவ்வு - வவ்வு.

     முதற்காலத்தில் அவ் என்னும் வடிவே, வாயினாலும் கையினாலும்
மனத்தாலும் பற்றும் மூவகைப் பற்றையும் குறித்தது. பிற்காலத்தில் அவ்வுதல்
என்னுஞ் சொல் மனத்தினாற் பற்றுதலுக்கும், கவ்வுதல் என்னுஞ் சொல்
வாயினாற் பற்றுதலுக்கும், வவ்வுதல் என்னுஞ் சொல் கையினாற்
பற்றுதலுக்கும் வரையறுக்கப் பெற்றன. ஆயினும், இன்றும், அவ்வுதல்
என்பது உலக வழக்கில் வாயினாற் பற்றுதலை உணர்த்தும்.

     எ-கா:கன்று புல்லை அவ்வித் தின்கிறது.

     அவ் - ஒள, கவ் - கௌ, வவ் - வௌ.

     அவ்வு - ஒளவு, கவ்வு - கௌவு, வவ்வு - வௌவு.

     "அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
      ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்"(தொல். 56)

என்பதற் கொத்து,