பக்கம் எண் :

28மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

5. சொற்குலமுங் குடும்பமும்

     மக்களைப்போன்றே சொற்களும் குடும்பங் குடும்பமாகவும் குலங்
குலமாகவும் தொடர்புற்று இயங்குகின்றன. ஒவ்வொரு மொழியும் ஒரு நாடும்,
ஒவ்வொரு வேர்வழிச் சொற்றொகுதியும் ஒரு குலமும், ஒவ்வோர் அடிவழிச்
சொற்றொகுதியும் ஒரு குடும்பமும் போல்வன.

     ஒரு நாட்டான் அயல்நாடு சென்று பல்லாண்டு தங்கிக் குடியுரிமை
பெற்றுவிடினும், அவன் அயன்மையை மறைக்க முடியாது. யாரேனும் மறைக்க
முயலின், வரலாற்றாராய்ச்சி அதை வெளிப்படுத்திவிடும்.

     அங்ஙனமே, ஒருமொழிச் சொல்லும் பிறமொழிச் சென்று
வழக்கூன்றினும் அதன் அயன்மையை மறைக்க முடியாது; யாரேனும் மறைக்க
முயலின், வரலாற்றாராய்ச்சி அதனை வெளிப்படுத்திவிடும்.

     இவ் வீருண்மைகளையும் விளக்குமாறு ஒரு சொற்குலத்தையும் மூன்று
சொற்குடும்பங்களையும் ஈண்டுக் காட்டுவோம்.

சொற்குலம்

     கல் - கல் என்பது கருமையைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல்.

     கல்-கன்-கன்னல் = கரிய கரும்பு.

     ஒ.நோ.: Gk. kanna, L. canna, Fr. canna, E. canne,
     cane = a reed.

     sugar cane = கரும்பு; கன்னங்கரேர் என்னும் வழக்கை நோக்குக.

     கல்-கால் = கருமை. கால்-காலா (இந்தி) = கருமை.

     கல்-கன் - கன்று. கன்றுதல் = வெயிலாற் கருகுதல், வேலையிற்
     பயின்று கை கருத்தல், முகங்கருத்துச் சினத்தல், சினந்து பகைத்தல்.

     கன்று-அன்று.

     கல்-கள்-கள்ளம் = கருமை, கரிய இருள் போன்ற மறைப்பு,

     மறைப்பாகிய திருட்டு, வஞ்சனை.

     கள்-கள்ளன் = திருடன். கள்-களவு = மறைப்பு, திருட்டு.

     கள்-கள்வு-கள்வன்-களவன் = கருநண்டு.

     "புள்ளிக் கள்வன்" (ஐங். 21), "புள்ளிக் களவன்" (கலித். 88).

     களவன்-கடப்பான் (உலக வழக்கு).

     ஒ.நோ: A.S. crabba, Ger. crabba, E. crab.