பக்கம் எண் :

சேயும் சேய்மையும் 85


11. சேயும் சேய்மையும்

     சொல்லாராய்ச்சியில் ஈடுபட்ட தமிழன்பர் ஒருவர் இரு மாதங்கட்கு
முன் என்னிடம் வந்து, "பல சொற்கள் ஒரே வடிவில் நின்று வெவ்வேறு
பொருள் குறிக்கின்றனவே! அவற்றிற்கெல்லாம் எங்ஙனம் வேர் காண்பது?
எடுத்துக்காட்டாக, சேய் என்னுஞ் சொல் குழவியைக் குறிக்கின்றது; சேய்மை
என்னுஞ் சொல் தொலைவைக் குறிக்கின்றது. இதுவரை 'செந்தமிழ்ச்
செல்வி'யில் வெளிவந்துள்ள வேர்ச்சொற் கட்டுரைகளை யெல்லாம் துருவிப்
பார்த்தும், இதுபற்றி ஒன்றும் அறிதற்கில்லையே" என்று தம் மலைப்பைச்
சற்று மன வருத்தத்துடன் வெளியிட்டார். யான் அதற்குச் சுருக்கமாக விடை
கூறினேனாயினும், அது விளக்கமாயில்லாமையாலும், விரிவான விடை ஒரு
கட்டுரையளவு நீள்வதாலும், அவர்க்கு மட்டுமன்றி எல்லார்க்கும்
பயன்படுமாறும், இவ் விளக்கக் கட்டுரை வரையத் துணிந்தேன்.

     'செல்வி'யில் வெளிவந்துள்ள வேர்ச்சொற் கட்டுரைகள் ஒருசில
சொற்கட்கே யன்றி எல்லாவற்றிற்குமல்ல. எல்லாவற்றிற்கும் வேர்காண
வேண்டின், அது ஒரு சொற்பிறப்பியல் அகரமுதலியில்தான் இயலும்.
அத்தகைய அகரமுதலியொன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
என்னால் தொகுக்கப்பெறவிருந்ததைச் சிலர் கெடுத்துவிட்டனர். இதை அப்
பல்கலைக்கழகமேனும் பொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பேராசிரியரேனும்
இன்னும் உணரவில்லை.

     சேய், சேய்மை என்னும் இரு சொல்லும் வெவ்வேறு வடிவின வேனும்,
ஒரே வடிவிலும் இருத்தல்கூடும். சேய்மை = குழவித் தன்மை, தொலைவு.

1. சேய்

     என் 'முதற்றாய்மொழி'யைப் படித்தவர், முன்வரற் கருத்தில் தோன்றற்
கருத்தும், தோன்றற் கருத்தில் இளமைக் கருத்தும், இளமைக் கருத்திற்
சிறுமைக் கருத்தும் தோன்றுவதையும், உகரச் சுட்டின் விரிவாகிய உல்
என்னும் முதலடியினின்றும் மொழிமுதலெழுத்துகளை முதலிற் கொண்ட
குல்
சுல் துல் நுல் புல் முல்
என்னும் ஆறு வழியடிகள் திரிவதையும்
பார்த்திருக்கலாம்.