மலையடிகள் நூல்களையும் என் நூல்களையுங் கண்டு தம் கருத்தைத் திருத்தியிருப்பார்; தம் கூற்றையும் மாற்றியிருப்பார். |
தமிழ் ஐந்தெழுத்தால் ஆனதன்று; 31 எழுத்தால் ஆனது. மேலும்,மொழி என்பது சொற்றொகுதியேயன்றி எழுத்துத்தொகுதியன்று. வடமொழி 46 அல்லது 48 எழுத்துகளையுடையதேனும், தனிமொழி யன்று; தன் சொற்களுள் ஐந்திலிரு பகுதிக்குமேல் தமிழினின்று கடன் கொண்டதே. இதைத் தேசிகர் அறிந்திலர். |
வடமொழி யிலக்கணத்தில் எழுத்தும் சொல்லும் ஓரளவு தமிழைத் தழுவியன; யாப்பு முற்றிலும் வேறுபட்டது; அணி பெரும்பாலும் இரண் டிற்கும் பொதுவாம்; ஆயினும் சில தமிழ்ச்சொல்லணிகள் வடமொழியில் வரா; பொருள் வடமொழியில் இல்லவேயில்லை. இதுவே தமிழில் முதன் மையானது. ஆகவே, இரு மொழியிலும் இலக்கணம் ஒன்றேயென்பது அறியாமையின் பாற்பட்டதாம். வடமொழியிலக்கணம் தமிழிற்குத் தேவையில்லை. |
5. அனவரத விநாயகம்பிள்ளையார் |
இவர் இந் நூற்றாண்டுத் தொடக்கத்திற் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவராயிருந்து, பல அடிப்படைத் தமிழ்ச்சொற்களைப் பிராகிருதத்தினின்றும் வடசொற்களினின்றும் திரிந்தனவாகக் காட்டி, பர்.சு.கு. சட்டர்சியைப் பெரிதும் கெடுத்தவர்; ஆராய்ச்சியில்லா ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் தவறான வழிகாட்டியவர். |
6. வையாபுரிப் பிள்ளையார் |
இவர் இந் நூற்றாண்டின் முற்பகுதியிற் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலிப் பதிப்பாசிரியராக இருந்து, அதை இந்தியப் பொது அகரமுதலி என்னும் அளவு கெடுத்தும், பின்னர் அப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகிப் பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் எழுதித் தம்மால் இயன்ற அளவு தமிழைக் காட்டிக் கொடுத்தும், தம் பெயர் என்றும் நிலவுமாறு செய்தவராவர். |
7. மா.சாம்பசிவப்பிள்ளையார் |
இந் நூற்றாண்டில் தோன்றிய தலைசிறந்த தமிழறிஞருள் ஒருவரும், தமிழ் ஆங்கிலம் வடமொழி சட்டம் ஆகிய நாற்றுறையிலும் கலைத் தலை |