பக்கம் எண் :

மொழிநூல்7

     உரிச்சொல் என்பது இலக்கணவகைச் சொல்லன்று, ஆரியர் வந்த பின், செய்யுளிலுள்ள அருஞ்சொற் பொருளுணர்த்தும் சொற்களஞ்சியம் போல் அது தொடங்கியதாகத் தோன்றுகின்றது.
     ஒருபொருட் பலசொல், பலபொரு ளொருசொல் என்னும் பாகுபாடு பொதுவாதலால், இயற்சொற்கும் ஏற்கும்.
எ-டு:கொள் = வாங்கு, சுற்று(வினை), காணம்(பெயர்)-பல பொருளொருசொல்.
உரை, சொல், மொழி - ஒருபொருட் பலசொல்.
     தொல்காப்பியம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் ஆக்கப்பட்ட பாணினீயத் திற்கு முந்தி 7ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற நூலாதலாலும், அது அகத்தியமும் அதற்கு முன்னூலுமான "முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி" இயன்றதாதலாலும், மேற்காட்டிய தொல்காப்பிய நூற்பாக்களே மொழிநூல்பற்றி உலகில் முதன்முதல் எழுந்தவை யென்பது தெள்ளத் தெளிவாம்.
     இனி, வேதப் பிராதிசாக்கியங்களைத் தொல்காப்பியத்திற்கு முந்தின வாகக் காட்ட முயலினும், தொல்காப்பியம் கி.மு. பல்லாயிரம் ஆண்டு கட்கு முந்திய முதலிரு கழக இலக்கண நூல்களின் வழிவந்த சார்பிற் சார்பு நூலேயாதலின், அம் முயற்சி வீணே யென்பது தெரிதரு தேற்றமாம்.
     இக்காலத்தும் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கவல்ல தமிழுக்குத் தொல்காப்பியர் காலத்தில் வடசொற்றுணை தேவையின் றேனும், அதை அவர்தம் நூலிற் குறித்தது அவரது வரையிறந்த வடமொழிப் பற்றையே காட்டும்.
3.மொழிநூல் முதன்மை
     ஒரு மொழியின் வரலாற்றையும் ஒரு சொல் எம் மொழிக்குரியது என்பதையும் மட்டுமன்றி, ஒரு நூற்பாவின் உண்மையான பாடத்தையும் அல்லது வழுவையும் அறிய மொழிநூல் உதவுகின்றது.
     ழுசகரக் கிளவியும் அவற்றோ ரற்றே                  அவைஒள
என்னும் ஒன்றலங் கடையேழு                  (62)