பக்கம் எண் :

76வண்ணனை மொழிநூலின் வழுவியல்

      (2) ஆரிய முழங்கு நிறுத்தங்கள் பின்னர் முறையே, p, t, kஆகிய முழங்கா உரசிகளாகத் (voiceless fricatives) திரிந்தன.
      இந் நெறிமுறைகளின் குறைபாடு பின்னர் விளக்கப்பெறும். இவற்றின் ஒருசார் இலக்கணவழு இவர்க்குப் பின்வந்த வெர்னெர் (Verner) என்பவரால் திருத்தப்பெற்றது. யாக்கோபு கிரிம் தியூத்தானிய இலக்கணமும் இயற்றி வெளியிட்டார் (1819 -37).
      பிரான்சு பாப்பு (Franz Bopp) என்பவர், சமற்கிருதம், செந்து (நனே), கிரேக்கம், இலத்தீன், இலித்துவானியன், பழஞ் சிலாவோனியம், கோதியம், செருமானியம் ஆகிய மொழிகளின் ஒப்பியல் இலக்கணத்தை 6 மடலமாக வெளியிட்டார் (1833 - 52). இவரால் ஒப்பியன் மொழிநூல் வளர்ச்சியடைந்தது.
      இராப்பு (J.M.Rapp) என்பவர் கிரேக்கு, கோதியம், இலத்தீன் ஆகிய மொழிகளின் ஒலிமுறைகளையும், அவற்றின் வழிவந்த இடைக் கால இக்கால மொழிகளின் ஒலிமுறைத் திரிபுகளையும் ஆய்ந்து, முந் நிலைகளையுங் காட்டி 4 மடலங்கள், முறையே, 1836, 1839, 1840, 1841 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டார்.
      பாட்டு (Pott) என்னும் செருமானியச் (1802 - 27), மொழி வளர்ச்சி நிலைகள் அசைநிலை (Isolating), கொளுவுநிலை (Agglutinating), பகுசொன்னிலை (Flexionnal), பஃறொகைநிலை (Incorporating, என நாலாக வகுத்தார்.
      வில்சன் (H.H.Wilson) என்னும் ஆங்கிலர், 1813-ல் விட்டுணு புராணமும், 1841-ல் சமற்கிரும இலக்கணமும் வெளியிட்டார்.
      ஆகத்து கிளேச்சர் (August Schleicher) என்பவர் (1821 - 68) முதனிலை ஆரியத்தின் (Proto - Aryan) மறுவமைப்பைச் (Reconstruction) செய்தார்; இந்தோ -ஆரிய மொழிகளின் ஒப்பியலிலக்கணம் வெளியிட்டார்.
      மாக்கசு முல்லர் (Max Muller) என்னும் செருமானிய மொழிநூற் பேரறிஞர் (1823 -1900), பன்மொழிகளை, சிறப்பாக ஆரிய மொழிகளை, கற்றுத் தேர்ந்து, 1844-ல் இதோபதேச மொழிபெயர்ப்பையும், 1849முதல் 1874 வரை இருக்கு வேத 6 மடலங்களையும், 1859 - ல் சமற்கிருத இலக்கிய வரலாற்றையும், 1861 முதல் 1863 வரை மொழிநூற் கட்டுரை