பக்கம் எண் :

வண்ணனை மொழிநூலின் வழுவியல்93

2
வண்ணனை மொழிநூல்
1.மொழிநூற்குலைவு
     மொழிநூலானது வரலாற்றியல், வண்ணனையியல், ஒப்புநோக்கியல் என்னும் மூவியல்களையும் ஒருங்கே யுடையதேனும், மேலை மொழிநூலார் இயன்மொழியாகிய தமிழை அடிப்படையாயக் கொள்ளாது திரிபில் திரிபாகிய ஆரியத்தை அடிப்படையாக வைத்து ஆய்ந்ததினால், மூல மொழியையும் அது தோன்றிய வகையையுங் காணாது குன்று முட்டிய குரீ இ போல் இடர்ப்பட்டு, வரலாற்றியலை அடியோடு விலக்கிவிட்டு வண் ணனையியலையும் ஒப்பியலையுமே கையாண்டுவருகின்றனர்.
     ஒரு குடும்பத்திலுள்ள மக்களுள் ஒவ்வொருவரையும்பற்றி, இவர் இன்ன பாலினர்; இன்ன நிறத்தர்; இன்ன வளர்த்தியர்; இன்ன தோற்றத்தர்; இன்ன இயல்பினர்; இன்ன திறமையர் என்று கூறுவது போன்றது வண்ணனை மொழியியல் (Descriptive Linguistics)
     ஒரு குடும்பத்தார் எல்லாரையும் ஒப்புநோக்கி, இக் குடும்பத்தில் இத் தனையர் ஆடவர்; இத்தனையர் பெண்டிர்; இத்தனையர் சிவப்பர்; இத்த னையர் கருப்பர்; இத்தனையர் நெடியர்; இத்தனையர் குறியர்; இத்தனையர் ஒத்தவர்; இத்தனையர் வேறுபட்டவர் என்றுரைப்பது போன்றது ஒப்பியன் மொழிநூல் (Comparative Linguistics)
     ஒரு குடும்பத்தாருள், இன்னார் தந்தையார்; இன்னார் தாயார்; இன்னார் புதல்வர்; இன்னார் புதல்வியர்; இன்னார் தமையனார்; இன்னார் தம்பிமார்; இன்னார் தமக்கையார்; இன்னார் தங்கைமார் என்றிங்கனங் கூறுவது போன்றது வரலாற்று மொழிநூல் (Historical Linguistics)