பக்கம் எண் :

பழந்தமிழாட்சி1

அரசியலுறுப்புகள் 

    ஒரு நாடு அல்லது சீமை (State)
    (1) ஆள்நிலம் (
Territory )
    (2) குடிகள் (
Population )
    (3) அரசியல் (
Government )
    (4) கோன்மை (
Sovereignty )


என நாலுறுப்புகளையுடையது. இந் நான்கும் உள்ள நாட்டை நிறைநாடு என்றும், இவற்றுள் ஒன்றும் பலவுங் குறைந்ததைக் குறை நாடு என்றும் அழைக்கலாம்.

    1) ஆள்நிலம் : சேர சோழ பாண்டியர் என்னும் முத்தமிழ ரசரும், தனித்தனி ஆண்ட சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என்னும் முந்நாடும் சேர்ந்த தமிழகம் முதலாவது (தலைச்சங்க காலத்தில்) வடபெண்ணை யாற்றிற்கும், தெற்கில் அமிழ்ந்துபோன பஃறுளியாற்றிற்கும் இடைப்பட்டதாயிருந்தது; பின்பு (இடைச் சங்க காலத்திலும் கடைச்சங்க காலத்திலும்), வேங்கட(திருப்பதி) மலைக்கும் கடல்கொண்ட குமரி(கன்னி)யாற்றிற்கும் இடைப் பட்டதாயிருந்தது. அதன்பின், குமரியாறுங் கடல் கொள்ளப்பட்டுக் குமரிமுனை (Cape Comorin) தெற்கெல்லையாயிற்று.

    தமிழகத்தில் சேரநாடு மேற்கிலிருந்தமையால் குடபுலம் என்றும், சோழநாடு கிழக்கிலிருந்தமையால் குணபுலம் என்றும், பாண்டியநாடு தெற்கிலிருந்தமையால் தென்புலம் என்றும் கூறப் பட்டன. இம் முந்நாடும் தமிழ் நாடேயாயினும், பாண்டிய நாடே சிறந்த தமிழ் வழக்குப் பற்றியும் தமிழ்ச் சங்க விருக்கை பற்றியும், தமிழ் நாடெனச் சிறப்பித்துக் கூறப்பெற்றது.


1.கிருஷ்ணா கோதாவரி மாவட்டங்களைக்கொண்ட கீழைச் சாளுக்கிய நாடு வேங்கை நாடு என்றும், அதற்கு மேற்கே பம்பாய் மாகாணத் தென்பகுதியிலிருந்த மேலைச் சாளுக்கியநாடு வேள்புலம் என்றும், பெயர் பெற்றிருந்ததினால், தலைச்சங்கக் காலத் தமிழக வடவெல்லை கிருட்டிணையாறு என்று கொள்ள இடமுண்டு.