8. இராசராச வளநாடு 9. பாண்டிய குலாசனி வளநாடு பொதுவாக ஒரு வளநாடு ஈராற்றிற் கிடைப்பட்ட தென்பர். உய்யக்கொண்டான் வளநாடு அரிசிலாற்றுக்கும் காவிரியாற்றுக்கும் இடைப்பட்டிருந்தது. பாண்டிப் பெருநாடு பல நாடு களாகவும், ஒவ்வொரு நாடும் பல கூற்றங்களாகவும், ஒவ்வொரு கூற்றமும் பல கூறு களாகவும் அல்லது ஊர் களாகவும் பகுக்கப்பட்டிருந்தன. ஊர் என்பதற்குப் பதிலாகப் பிற்காலத்தில் கிராமம் என்னும் வடசொல் வழங்கிற்று. பாண்டிநாடு முழுவதும் ஐந்து வட்டகையாக வகுக்கப் பெற்று, அவற்றை ஐந்து சிற்றரசப் பாண்டியர் ஆண்டு வந்தனர் என்றும் அதனால் பாண்டியன் பஞ்சவன் எனப்பட்டான் என்றும், அறிஞர் கூறுவர். ஒரு பெருநாடானது, வளநாடு அல்லது நாடு என்னும் பிரிவிற்கு மேற்பட்ட மாகாணப் பிரிவையுடையதாயின், அப்பெரும் பிரிவு மண்டலம் என அழைக்கப்பெறும். கொங்கு மண்டலம் தொண்டை மண்டலம் என்பன ஒரு காலத்தில் முறையே சேரப் பெருநாட்டையும் சோழப் பெருநாட்டையும் சேர்ந்த மாகாணங் களாயிருந்து பின்பு தனி நாடுகளாய்ப் பிரிந்துபோயின. தொண்டைநாடு (தனி நாடாய்ப் பிரிந்து போனபின்) பல கோட்டங் களாகவும். ஒவ்வொரு கோட்டமும் பல கூற்றங் களாக வும் பகுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 24 கோட்டங்களும் 96 கூற்றங்களுமிருந்தன. சிற்றூராயின் பலவூர் சேர்ந்தும், பேரூராயின் தனித்தும், ஒரு கூற்றமாக வகுக்கப்பட்டிருந்தன. தனியூர்க் கூற்றம் தற்கூற்றம் எனப்பட்டது. சேரப் பெருநாடு பாண்டிப் பெருநாடு போன்று பகுக்கப் பட்டிருந்ததுபோலும். ஒரு தமிழ்ப் பேரரசன், பிற அரசரை வென்றபின் அவரைச் சிற்றரசராகப் பாவித்து, அவர் நாடுகள் தன் நாட்டிற்கு அண்ணிய வாயின், அவற்றைத் தன் பேரரசிற் குட்பட்ட மண்டலங்களாக வகுத்து, அவற்றிற்குத் தன் விருதுப்பெயர்களை இடுவது வழக்கம். அன்று அவன் சொந்தப் பெருநாடும் ஒரு மண்டலமாக அமையும். 1. விசுவநாத நாயக்கர் பாண்டிநாட்டைக் கைப்பற்றியபோது, அவர் பஞ்சபாண்டியர் என்னும் ஐந்து சிற்றரசரோடு போர் செய்ய வேண்டியிருந்தது. |