பக்கம் எண் :

126பழந்தமிழாட்சி

     அரண்மனைச் செலவெல்லாம் அரசியற் செலவாகவே கருதப் பட்டது. அரசியற் செலவும் அரண்மனைச் செலவும் போக எஞ்சிய பொதுவகை(சாதாரண)ப் பொருள்களெல்லாம், கொடைக்குப் பயன்படுத்தப்பட்டன. அரசர்க்கே தகும் அருவிலையணிகலன் களும், பெருமணிகளும், பெருந்தொகையான பொற்காசுகளும், அரசன் சொந்த உடைமையாகப் போற்றப்பட்டன. குறிப்பிட்ட நிறைக்கு மேற்பட்ட மணிக்கற்களைக் குடிகள் வைத்திருக்கவாவது நாடு கடத்தவாவது கூடாதென்றும், அரசனிடத்தில் ஒப்புவித்து விலைபெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கண்டிப்பான அரசவிதி யிருந்தது. அரசனுக்குச் சொந்தமாக இருந்த நிலத்திற்குக் கண்டுழவு என்று பெயர். அரசியர்க்குச் சிறுபாட்டுச் செலவிற்கென்று நிலங் களும் ஊர்களும் விடப்பட்டு இருந்ததாகவும் தெரிகின்றது.

     அரசன் இன்பமாகப் பொழுதுபோக்குவதற்குப் பல வழிகள் இருந்தன. கண்போலும் நண்பரோடு அளவளாவலும், ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விப் புலவரொடு பயிலலும், நகையாண்டி சொற்கேட்டலும், வட்டாட்டு, வல்லாட்டு, புனலாட்டு முதலிய விளையாட்டுகளை யாடலும் இலவந்திகைச் சோலைக்கும் செய்குன்றிற்கும் நெய்தலங்கானலுக்கும் உலாப் போதலும், பாணர் பாடினியர் கணிகையரின் இசை கேட்டலும், விறலியர் கணிகையர் சாக்கையரின் கூத்துக் காண்டலும், வேட்டையாடலும், மலைவளங் காணலும், பிறவும் அரசன் இன்பமாகப் பொழுதுபோக்கும் வழிகளாம். அரசன் உலாப்போகும் போது தோழியரொடு செல்வது வழக்கம்.1 அவருக்கு அரசனொடு மெய்தொட்டுப் பயிலவும் விளையாடவும் உரிமையுண்டு .

" வையமுஞ் சிவிகையு மணிக்கா லமளியும்
 உய்யா னத்தி னுறுதுணை மகிழ்ச்சியுஞ்
 சாமரைக் கவரியுந் தமனிய வடைப்பையுங்
 கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
 பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
 பொற்றொடி மடந்தையர்"
                  (14 : 126-131)

என்னும் சிலப்பதிகாரப் பகுதியால் அரசன் பரத்தையரொடு உலாப்போதலும், அவர்க்கு அவன் பற்பல வரிசையளித்தலும், உண்டென்பது பெறப்படும்.

     அரசர், பருவம்வந்த புதல்வரைத் துணையரையராக அல்லது மண்டலத் தலைவராக, வெவ்வேறிடத் தமர்த்தி வைப்பது பெரும்



1. அரசன் தோழியரொடு செல்லும் இன்பவுலாவும், நகர் வலம் வரும் வெற்றியுலாவும் வேறுபட்டவை.