பக்கம் எண் :

138பழந்தமிழாட்சி

(9) களவழி வாழ்த்து: அரசன் போர்க்களத்திற் பெற்ற செல்வத்தைச் சிறப்பித்துப் பாடுவது களவழி வாழ்த்து.

(10) பரணி: கடவுள் வாழ்த்து,கடைதிறப்பு, காடு பாடல், கோயில் பாடல், தேவியைப் பாடல், பேய்களைப் பாடல், இந்திர சாலம், இராசபாரம்பரியம், பேய் முறைப்பாடு. அவதாரம், காளிக்குக் கூளி கூறல், களங்காட்டல், கூழடுதல் என்னும் பதின் மூன்றுறுப்பமைய, ஓர் அரசனின் போர்வெற்றியைப் பல்வகை யீரடித் தாழிசையாற் பாடுவது பரணியாகும்.

(11) பெயரின்னிசை: அரசனின் பெயரைச் சிறப்பித்து, தொண்ணூறு அல்லது எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாப் பாடுவது பெயரின்னிசை.

(12) ஊரின்னிசை: அரசனின் தலைநகரைச் சிறப்பித்து, மேற் கூறியபடி பாடுவது ஊரின்னிசை.

(13) பெயர்நேரிசை: அரசனின் பெயரைச் சிறப்பித்து, மேற் கூறிய அளவு நேரிசை வெண்பாப்பாடுவது பெயர் நேரிசை.

(14) ஊர் நேரிசை: அரசனின் தலைநகரைச் சிறப்பித்து மேற் கூறியவாறு பாடுவது ஊர் நேரிசை.

(15) தசாங்கப்பத்து: அரசனுடைய மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானை, குதிரை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்துறுப்பு களைப்பற்றிப் பத்து நேரிசை வெண்பாப்பாடுவது தசாங்கப்பத்து,

(16) அவற்றை ஆசிரிய விருத்தத்தாற் பாடுவது தசாங்கத் தயல்.

(17) சின்னப்பூ: மேற்கூறிய பத்தரச வுறுப்புகளைப்பற்றி, நூறேனும் தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் முப்ப தேனும் நேரிசை வெண்பாப்பாடுவது சின்னப்பூ.

(18) எண்செய்யுள்: அரசனின் பெயர் தலைநகர் முதலிய வற்றைப் பற்றி, பத்து முதல் ஆயிரஞ் செய்யுள்வரை, அவ்வத் தொகை யாற் பெயர்பெறப் பாடுவது எண் செய்யுள்.

(19) குடைமங்கலம்: அரசனது குடையைச் சிறப்பித்து வெண் பாவாற் பாடுவது குடைமங்கலம்.

(20) வாண்மங்கலம்: பகையரசனை வென்ற வேந்தன் தன்வாளைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் செய்யுள் வாண்மங்கலம் எனப்படும்.

(21) விளக்கு நிலை: அரசனது விளக்கு அவன் செங்கோலோ டோங்கிவருவதைக் கூறுஞ் செய்யுள் விளக்கு நிலையாம்.