பக்கம் எண் :

22பழந்தமிழாட்சி

அரசன் அதிகார முறையில் இருக்குமிடம் உடனிருந்து செல்லு மிடம் உடன் செல்லும். அது நிறத்தாலும் வடிவாலும் தண்மைக் குறிப்பாலும் மதியை ஒத்திருத்தலால், மதிக்குடை அல்லது மதி வட்டக்குடை என்றும்; கொற்றத்தைக் குறித்தலால், கொற்றக் குடை அல்லது வெண்கொற்றக் குடை என்றும் பெயர் பெறும்.

     கோல் என்னும் பெயர் போன்றே, குடை என்னும் பெயரும் ஆகுபெயராய் ஆட்சியைக் குறிக்கும். அதனால், ஓர் அரசன் ஒரு பெருநாட்டைத் தனிநாயகமாய் ஆள்வதை, ‘உலக மெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆள்தல்‘ என்பர்.

     (8) கொடி: கொடி என்பது, அரசனது அடையாள வடிவம் எழுதிய துணி அல்லது பட்டுக்கொடி. அது அதன் அடையாள வடிவாற் பெயர் பெறும். சேரனுக்கு விற்கொடி; சோழனுக்குப் புலிக்கொடி; பாண்டியனுக்கு மீன்கொடி (மீனக்கொடி).

     (9) முத்திரை: முத்திரை யென்பது, அரசனுடைய திருமுகத் தில் மையாலும் அரக்காலும் மண் என்னும் சாந்தாலும் பொறிக்கப் படும் அடையாள வடிவம், மூவேந்தர்க்கும் அவரவர் கொடியி லெழுதப்பட்ட வடிவமே முத்திரையாகவுமிருந்தது.

     ஓர் அரசன், தன்னால் வெல்லப்பட்ட அரசரின் முத்திரை களையும், தன் முத்திரையுடன் சேர்த்துப் பொறிப்பது வழக்கம். செங்குட்டுவன் மும்முத்திரைகளையும், அதிகமான் எழு முத்திரை களையும், உடையவராயிருந்தனர்.

     (10) முரசு: முரசாவது, ஏதேனுமொன்றை அறிவித்தற்கு, அல்லது யாரேனும் ஒரு சாராரை அழைத்தற்கு அடிக்கப்படும் பேரிகை என்னும் பெரும் பறை. அது கொடை (தியாக) முரசு, முறை (நியாய) முரசு, போர்(வீர) முரசு என மூவகைப்பட்டதாகக் கூறப்படும். அவற்றுள் சிறந்தது போர்முரசு. அதற்குத் தனியாக ஒரு கட்டில் உண்டு. அது முரசுகட்டில் எனப்படும்.

     போர் முரசு, படை திரட்டுவதற்கு நகரத்திலும், பொருநரை ஊக்குவதற்குப் போர்க்களத்திலும், வெற்றி குறித்தற்கு ஈரிடத்திலும் இடியோசைபட முழக்கப்பெறும். அது புலியை வென்ற கொல் லேற்றின் சீவாத தோலால் போர்க்கப்பெறுவது மரபு.

"புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற
 கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடையுரிவை போர்த்த
 துனைகுரல்முரசம்"        
(2899)

என்று சிந்தாமணியும்,