பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்113

(ஊமைக்குழல்), என்னும் ஓரிசைக் குழலாகவும்; இருவகைப் பட்டிருந்தன. தாரை, சின்னம், வாங்கா, கொம்பு, சங்கு முதலிய ஓரிசைத் துளைக்கருவிகள், ஊர்வலம் போர் முதலிய நிகழ்ச்சிகளில் ஆரவார இசைக்கருவிகளாய்ப் பயன்படுத்தப்பட்டன. மகுடி என்பது நல்ல பாம்பை மயக்குதற்கென்றே அமைக்கப்பட்ட ஏழிசைச் சிறப்பின்னிசைக் குழலாகும்.

   நரப்புக் கருவிகள் ஒரு நரம்புள்ள சுரையாழிலிருந்து ஆயிரம் நரம்புகள் பெருங்கலம் (ஆதியாழ்) வரை, பல்வேறு வகைப்பட்டிருந்தன. அவற்றுள் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நான்கும் சிறந்தவை. அவற்றுள்ளும் தலை சிறந்தது செங்கோட்டியாழ். அதுவே பின்னர் வீணையாகத் திரிந்தது. ஆயிரம் நரம்பென்பது, ஆயிரங்காற் பூச்சி என்பதிற்போல், நரம்பின் பெருந்தொகையையே குறிக்கும்.

   "இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்" என்னும் திருவாச கக் கூற்று (369) செங்கோட்டியாழ் வீணையென்று சிறப்புப் பெயர் பெற்றமையையே காட்டும். எல்லா நரம்புக் கருவிகளும் யாழே. வீணை என்னும் பெயரும் விண் என்னும் வேரினின்று பிறந்த தென்சொல்லே. அது வடமொழியில் வீணா என்று திரியும். விண்ணெனல் நரம்பு தெறித்தொலித்தல். விண் - வீணை முதுகுன்றம் (பழமலை) விருத்தாசல மென்ற பெயர் மாறியதால் வேறு நகரமாகிவிடாது. அங்ஙனமே வீணையெனப்படும் செங்கோட்டியாழும் என்க.

   இரண்டாம் நூற்றாண்டினதான சிலப்பதிகாரத்தில் "நாரதன் வீணை நயந்தெரி பாடலும்" என்றும், 7ஆம் நூற்றாண்டினதான அப்பர் தேவாரத்தில் "மாசில் வீணையும்" என்றும், வருதலால், வீணை 11ஆம் நூற்றாண்டில் தோன்றியதென்பது பொருந்தாது. வேதகால நாரதர் தமிழ்நாடு வந்தே இசைகற்றுப் பஞ்சபார தீயம் என்னும் இசைத்தமிழ் நூலை இயற்றினார். பத்தாம் நூற்றாண் டினதான சீவகசிந்தாமணிக் காந்தருவதத்தை யிலம்பகத்தில், யாழென்றும் வீணையென்றும் ஒரே கருவி குறிக்கப்படுவதால், யாழ் வேறு வீணை வேறு அல்ல. இக்காலத்தில் சுரையாழும் வீணை யென்றே பெயர் பெற்றிருத்தல் காண்க.

   திருஞான சம்பந்தர் பாடிய யாழ்முரிப் பண்ணின் இயல்பு இன்று எவருக்கும் தெரியாமையால், யாழ்முரி வீணைக்கமையும் என்பதும் பொருந்தாது.

   தாளக்கருவி வெண்கலத்தினாற் செய்யப்பட்டதினால், அது வெண்கலக் கருவியெனப்பட்டது. சல் அல்லது சல்லரை என்னும் ஓசையுடைமையால் தாளக்கருவியிற் பெரியது சல்லரியென்னும் சிறியது சாலர் என்றும் பெயர் பெற்றன.