"ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்" (குறள். 714) என்னும் வள்ளுவர் கூற்றால், சிப்பிச்சுண்ணாம்புச் சாந்தின் வெண்மைச் சிறப்பு உணரப்படும். மாளிகை முதலில் அரசனுக்கே யுரியதா யிருந்ததினாலும், அரசன் வாழும் ஊர் பேரூரா யிருந்ததினாலும், நகர் என்னும் சொல் சினையாகுபெயராய்க் கோநகரையும் பேரூரையுங் குறித்தது. இன்றும், கூரைவீடுகள் நிறைந்த ஒரு நாட்டுப்புறத்தூருடன் காரை வீடுகள் நிறைந்த ஒரு சிற்றூர் அல்லது பேரூரை ஒப்புநோக்கினால், பின்னது விளங்கித் தோன்றுவது வெள்ளிடை மலையாம். பண்டைக் காலத்திற் பேரூர்களே காரைவீடுகளைக் கொண்டிருந்தன. "நெடுநகர் வினைபுனை நல்லில்" (புறம். 23) என்பதில், நகர் என்னும் சொல் பேரூரைக் குறித்தது. நகர் என்னும் சொல், தனி மாளிகையையும் அதனையுடைய பேரூரையுங் குறித்ததினால், இம் மயக்கை நீக்கும் பொருட்டு, பேரூரை மட்டும் குறித்தற்கு இகரவீறு கொண்ட நகரி என்னும் சொல் எழுந்தது. நகரை(மாளிகையை)யுடையது நகரி. இகரம் இங்குக் காடைக்கண்ணி, நாற்காலி என்பவற்றிற்போல் ஒன்றை உடைமையை உணர்த்தும் ஒன்றன்பாலீறு. இன்று நகர் என்னும் சொல் உலக வழக்கில் மாளிகையை அல்லது வளமனையை உணர்த்தாமையால், மேற்கூறிய மயக்கிற்கு இடமில்லை. பட்டி என்பது மாட்டுப் பட்டியுள்ள சிற்றூரைக் குறித்தது போன்றே, நகர் என்பதும், மாளிகையுள்ள பேரூரைக் குறித்தது. பதி என்னும் சொல் வீட்டையும் நகரையும் குறித்தல் காண்க. நகர் என்னும் சொல், அம் என்னும் பெருமைப்பொருட் பின்னொட்டுப் பெற்று நகரம் என்றாகும். அதுவும் தனி மாளிகையையும் பேரூரை யும் குறிக்கும். ஒளஅம்க ஈறு பெருமைப்பொரு ளுணர்த்தலை இல்லம், நிலையம், மதியம் (முழுநிலா), விளக்கம் முதலிய சொற்களிற் காண்க. நகரம் = 1. அரண்மனை (யாழ். அக.) 2. கோயில் "மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்" (சிலப். 14 : 9) விண்டுநகரம் - விண்ணகரம் = திருமால் கோயில். |