பக்கம் எண் :

90பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

வானளாவும் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்த பண்டைக் காலத்தில், மாபெருந் தேர்கள் செய்யப்பட்டிருந்ததில் வியப்பில்லை.

   தெய்வத் தேரிற் பல அணியுறுப்புகளும் தேவர் முனிவர் படிமைகளும் யாளி குதிரை யுருவங்களும் செய்து வைக்கப்பெறுத லால், தேர்த்தச்சர் தச்சுக் கலையில் தலைசிறந்தவராவர்.

   கட்டுமரம் முதல் கப்பல்வரை பல்வகைக் கலங்களையும் செய்யும் தச்சர் கலம்புணர் கம்மியர் (கப்பல் தச்சர்) எனப் பட்டார்.

"காட்சி கல்கோள் நீர்ப்படை நடுகல்" (தொல். புறத்.5)

என்னும் வெட்சித்திணைத் துறைகளும், செங்குட்டுவன் பனிமலை யிற் கல்லெடுத்துக் கண்ணகிக்குப் படிமஞ் சமைப்பித்ததும், கல்தச்சு வினைக்குச் சான்றுகளாம்.

   மண்டபங்களை யெல்லாம் கல்லாற் கட்டுவதே தொன்று தொட்ட வழக்கம். நூற்றுக்கால் மண்டபங்களும் ஆயிரக்கால் மண் டபங்களும் விழாப்படி மண்டபங்களும் அத்தகைய. கற்கோயில் கற்றளியெனப்பட்டது. தளி கோயில். தெய்வப் படிமைகள் (சிலைகள்) ஐவகைக் கொல்லராலும் செய்யப்பட்டன.

(4) கொத்தம்

   கொத்தம் என்பது கொத்தன் வேலை அல்லது கட்டடத் தொழில். இதைக் கட்டடக் கலை என்னும் தலைப்பிற் காண்க.

(5) கலவினை

கல வினை என்றது குயவன் செய்யும் கலத்தொழில்.
"கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
 இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
 அகலிரு விசும்பின் ஊன்றும் சூளை
..........................................
தாழி
அன்னோற் கவிக்கும் கண்ணகன்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே"
(புறம். 228)

என்னும் புறப்பாட்டில் சுள்ளை, திகிரி (சக்கரம்) மண் என்பவையும்,

"உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
 மட்பகையின் மாணத் தெறும்."
(883)

என்னும் குறளில், மட்பகை யென்னும் வனைகலம் அறுக்குங் கருவியும், சொல்லப்பட்டன.