ஆகையால், நாகரிகமென்பது, செல்வர் வறியர் என்னும் இரு சாரார்க்கும் பொதுவான, துப்புரவும் ஒழுக்கமும் பற்றியதேயன்றி, செல்வர்க்கும் மேலையொழுக்கத்தார்க்குமே யுரிய பொருள்களின் அழகும் விலையுயர்வும் பற்றியதன்று. * இக் குறியிட்ட பாகிகள் உயர்தரப் பாடசாலை மாணவர்க்கு வேண்டாதவை. 4. வியாசவகை - Classification of Essays வியாசங்கள் ஒன்றன் வரலாறுரைப்பதும், ஒன்றை வருணிப்பதும், ஒன்றைக் கருதியுரைப்பதும்பற்றி வரலாறு, வருணணை, கருதியல் என மூவகைப்படும். 1. வரலாறு - Narrative Essay வரலாற்று வியாசம் (1) கதை, (2) சரித்திரம் ( History ) (3) வாழ்க்கை வரலாறு ( Biography ), (4) நிகழ்ச்சி ( Event ), (5) உரையாட்டு அல்லது தருக்கம், (6) வழிப்போக்கு என ஆறுவகைப்படும். 2. வருணணை - Descriptive Essay வருணணை வியாசம் (1) பொருள், (2) இடம், (3), காலம், (4) சினை, (5), குணம், (6) தொழில், (7) காட்சி, (8) நிகழ்ச்சி என எண்வகைப்படும். 3. கருதியல் - Reflective Essay கருதியல் வியாசம் (1) அறிவுரை, (2) சீர்திருத்தம், (3) கண்டனம் அல்லது மறுப்பு, (4) நகைமொழி ( Wits and Humour ), 5. உன்னம் ( Imagination ) என ஐவகைப்படும். நிகழ்ச்சி இரண்டனுள், முன்னது உள்ளவாறுரைப்பது; பின்னது புனைந்துரைப்பது. 5. வியாசப் பொருள்கள் - Subjects for Composition 1. புலவர் - தொல்காப்பியர், திருவள்ளுவர், ஒளவை, கம்பர் முதலியோர். 2. அரசர் - கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலியோர். 3. சிற்றரசர் - பாரி, விசுவநாத நாயக்கர் முதலியோர். 4. சமயத்தலைவர் - புத்தர், ஏசுகிறிஸ்து, முகமது முதலியோர். 5. சமயத்தொண்டர் - நால்வர், இராமாநுஜர், விவேகானந்தர் முதலியோர். 6. பெருமக்கள் - பச்சையப்ப முதலியார், முத்துசாமி ஐயர் முதலியோர். 7. சீர்திருத்தியர் - ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் முதலியோர். 8. அடியார் - கண்ணப்பர், பட்டினத்தார் முதலியோர். 9. கலைஞர் - எடிசன், சந்திரபோஸ் முதலியோர். |